Published : 30 Apr 2022 04:50 AM
Last Updated : 30 Apr 2022 04:50 AM

நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை விரைந்து கொண்டு செல்ல 42 ரயில்கள் ரத்து

புதுடெல்லி: அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி வண்டிகள் விரைந்து செல்வதற்கு ஏதுவாக நாடு முழுவதும் 42 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் சுமார் 70 சதவீதம் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு விரைவாக தீர்ந்து வருகிறது. கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால் நிலக்கரி பற்றாக்குறையால் மின்னுற்பத்தி குறைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மின்தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அனல்மின் நிலை யங்களுக்கு நிலக்கரி ரயில்கள் விரைந்து செல்வதற்கு ஏதுவாக நாடு முழுவதும் 42 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி கள் நேற்று கூறும்போது, “இந்த ரயில்கள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ன. மின்னுற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியை விரைவாக கொண்டு செல் வதற்கு ரயில்வே போர்க்கால அடிப்படிடையில் நடவடிக்கை எடுத்துள்ளது. ரயில்கள் ரத்து நடவடிக்கை தற்காலிகமானது. நிலைமை சீரடைந்தவுடன் இந்த ரயில்கள் மீண்டும் இயக்கப்படும்” என்றனர்.

மத்திய மின்சார ஆணையத்தின் தினசரி நிலக்கரி இருப்பு அறிக்கையின்படி, நாட்டின் 165 அனல்மின் நிலையங்களில் 56-ல் நிலக்கரி இருப்பு 10 சதவீதம் அல்லது அதற்கு குறைவாக உள்ளது. 26 அனல்மின் நிலையங்களில் 5 சதவீதத்துக்கு குறைவாக உள்ளது.

டெல்லி மின்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நேற்று கூறும்போது, “முக்கியமான மின்னுற்பத்தி நிலையங்களில் குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு நிலக்கரி இருப்பு இருக்க வேண்டும். ஆனால் ஒரு நாளுக்கும் குறைவான நிலக்கரி மட்டுமே இருப்பில் உள்ளது. ஒரு நாளுக்கான நிலக்கரி இருப்பில் இல்லாமல் மின்னுற்பத்தி நிலையங்கள் செயல்பட முடியாது. இது மின்தடையை ஏற்படுத்தி மெட்ரோ ரயில், அரசு மருத்துவமனை போன்ற சேவைகளில் தடங்களுக்கு வழிவகுக்கும்” என்றார்.

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் நேற்று தனது ட்விட்டர் பதிவில், “ஒட்டுமொத்த இந்தியாவிலும் நிலைமை மோசமாக உள்ளது. இதற்கு நாம் கூட்டாக இணைந்து ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை தீர்க்க உறுதியான நடவடிக்கை தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்துறை பாதிப்பு

நிலக்கரி பற்றாக்குறை தொழில் துறையையும் பாதித்துள்ளது. சில தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியை குறைத்துள்ளன. இது பொருளாதார மீட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x