Published : 29 Apr 2022 04:15 AM
Last Updated : 29 Apr 2022 04:15 AM
புதுடெல்லி: ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ்ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்குமே 2-ம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஐரோப்பிய நாடுகளுக்கு 4 நாள் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி மேற்கொள்ளவுள்ளார். மே 2-ம் தேதி ஜெர்மனி செல்கிறார். பெர்லின் நகருக்குச் செல்லும் பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேலும் 2 நாடுகளின் நல்லுறவை வலுப்படுத்தும் ஐஜிசி அமைப்பின் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார். பின்னர் ஜெர்மனியில் உள்ள இந்தியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார்.
இதைத் தொடர்ந்து, மே 3-ம் தேதிடென்மார்க் செல்லும் பிரதமர்,அங்கு இரண்டாவது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். பின்னர் இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையும் நடைபெறவுள்ளது.மே 5-ம் தேதி பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, அங்கு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்துப் பேசவுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஜப்பான் உறவு: இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே தூதரக உறவை நிறுவி,நேற்றுடன் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் பொருளாதாரம் மற்றும் மக்களிடையேயான தொடர்பு என அனைத்து துறைகளிலும் இந்தியா, ஜப்பான் ஆகிய 2 நாட்டு உறவுகள் ஆழமடைந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் மேலும் கூறியுள்ளதாவது: அண்மையில், நண்பரும் பிரதமருமான கிஷிடா, உச்சி மாநாட்டுக்காக இந்தியாவுக்கு வருகை தந்தது, உலகளாவிய கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான ஒரு வரைபடத்தை வகுத்துள்ளது. அந்த நோக்கத்தை நிறைவேற்ற பிரதமர் கிஷிடா உடன் தொடர்ந்து பணி யாற்ற நான் விரும்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, பிரதமர் நரேந்திர மோடியுடன் 14-வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக கடந்த மார்ச் 19, 20-ம் தேதிகளில் 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தார். அப்போது, எரிசக்தி கூட் டாண்மை, இந்தியாவின் வடகிழக்கு மற்றும் மூங்கில் சாகுபடி மற்றும் செயலாக்கம் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கு இடையே பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை வரவேற்றனர்.
மேலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு மே 24-ம் தேதி டோக்கியோவில் நடைபெறவுள்ள நிலையில், அடுத்த மாதம் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் கிஷிடாவை மீண்டும் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT