Published : 29 Apr 2022 04:05 AM
Last Updated : 29 Apr 2022 04:05 AM

ராஜஸ்தான், உ.பி., டெல்லி, ஹரியாணா, ஒடிசாவில் 5 நாட்கள் அனல் காற்று வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க மகாராஷ்டிர மாநிலம் மும்பை பந்த்வார் பார்க் பகுதியிலுள்ள அரபிக் கடலில் நேற்று குளித்து மகிழும் சிறுவர்கள்.படம்: பிடிஐ

புதுடெல்லி: ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும். பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து வானிலை மைய விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: "ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியாணா, ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும். தற்போதே இந்த மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸ் (113 டிகிரி பாரன்ஹீட்) அளவை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு வடமேற்கு மாநிலங்களில் கூடுதலாக 2 டிகிரி செல்சியஸ் வெயில் இருக்கும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசும். இந்த நிலை மே முதல் வாரம் வரை நீடிக்கும். அதன்பிறகு மழை அதிகரிக்கும்போது வெப்ப நிலை குறையும். தற்போது மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி வருகிறது. டெல்லியில் 43 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை உள்ளது. டெல்லியில் இன்று (வெள் ளிக்கிழமை) 44 டிகிரி செல்சியஸ் பதிவாகும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெப்ப நிலை அதிகரித்துள்ள தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் மின்சார தேவை அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் தொழிற்சாலைகளுக்கு 4 மணி நேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத், ஆந்திராவை தொடர்ந்து தொழிற்சாலைக்கு மின்தடை அறிவித்த 3-வது மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது. அதேபோல கிராமப் பகுதிகளிலும் மின்தடை நிலவி வருகிறது. ஜம்முவிலும் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை உள்ளது. இங்கு அதிக வெப்ப நிலை காரணமாக மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஒடிசாவில் தொடர்ந்து 3-வது நாளாக 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. அதிக வெயில் காரணமாக ஏப்ரல் 30-ம் தேதி வரை இந்த மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திலும் வெயில் காரணமாக மே 2-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x