

கேரளாவில் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பதனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ரன்னி நகரில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேசிய தாவது:
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பாஜக வுக்கு ரகசிய தொடர்பு இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி குற்றம் சாட்டி உள்ளார். இது தவறானது.
பாஜகவைப் பொருத்தவரை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் தலைமை யிலான இடதுசாரி முன்னணி ஆகியவற்றிடமிருந்து கேரளாவை மீட்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் உள்ளது. இந்த இரண்டு கூட்டணிக்கும் மாற்று பாஜக மட்டுமே.
இவ்விரு கூட்டணியும் மாறி மாறி ஆட்சி செய்ததில் சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவினருக்கும் அநீதி இழைக்கப்பட்டது. எனவே, இங்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்த அநீதி சரிசெய்யப்படும்.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத் தில் ஊழல் நடந்துள்ளது. குறிப்பாக, ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. யாருடைய உத்தரவின் பேரில் இந்த மாற்றம் செய்யப்பட்டது, இந்த ஹெலிகாப்டரின் சோதனை ஓட்டத்தை வெளிநாட்டில் நடத்த முடிவு செய்தது ஏன் ஆகிய கேள்வி களுக்கு அந்தோணி பதில் அளிக்க வேண்டும் என்றார்.