

சந்திரபாபு நாயுடு முதல்வராகும் போதெல்லாம் ஆந்திராவில் வறட்சி ஏற்படுவதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா குற்றம் சாட்டி உள்ளார்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு, தெலங்கானா அரசு அணை கட்டும் விவகாரம் ஆகியவற்றை தட்டிக் கேட்காமல் மவுனம் சாதிக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கர்னூலில் கடந்த 2 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் நேற்று ரோஜா கலந்து கொண்டு பேசியதாவது:
சந்திரபாபு நாயுடு முதல்வராகும் போதெல்லாம் ஆந்திராவில் வறட்சி ஏற்படுகிறது.
முதல்வர் சந்திரபாபு நாயுடு கிருஷ்ணா மாவட்டத்துக்கு சென் றால் அந்த டெல்டா பகுதி வறண்டு விடுகிறது. இவர் கர்னூலுக்கு சென்றால் சைலம் அணையின் நீர் மட்டம் குறைந்து விடுகிறது.
வறட்சிக்கு பேண்ட், சட்டை போட்டால் அதன் பெயர் சந்திரபாபு நாயுடு என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கடும் வறட்சி நிலவும் போது, தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தெலங்கானா அரசு பாலமூரு-ரங்கா ரெட்டி அணைக்கட்டு கட்டி னால், 115 டிஎம்சி கிருஷ்ணா நதி நீர் தெலங்கானாவுக்கு செல்லும். இதனால், ஆந்திராவில் உள்ள ராயலசீமா மாவட்டங்களில் வறட்சி ஏற்படும் என்றார் ரோஜா.