Published : 29 Apr 2022 02:32 AM
Last Updated : 29 Apr 2022 02:32 AM
புதுடெல்லி: அடுத்த மூன்று நாட்களுக்கு வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 2 டிகிரி வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப அலை: இந்தியா முழுவதும் வழக்கத்தை விட கோடை வெப்பம் அதிகமாகவே தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. விதர்பா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கும், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், கங்கை நதி, மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவின் உள்பகுதி போன்றவைகளில் ஏப்ரல் 30 வரையிலும், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி ஆகிய பகுதிகளில் மே 1ம் தேதி வரையிலும், பீகாரில் ஏப்.29ம் தேதி வரையிலும், சத்தீஸ்கர் பகுதிகளில் 30ம் தேதி வரையில் வெப்ப அலை நீடிக்கும். தலைநகர் டெல்லியில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸைத் தொடும்.
மிக லேசான மழைக்கு வாய்ப்பு: மே 2ம் தேதி வரையில் வெப்பச்சலனம் தொடரும் என்றாலும், டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமைக்கு பின்னர் வெப்பம் குறைய வாய்ப்புள்ளன.
ஏப்.29 ம் தேதி வெள்ளிக்கிழமை பஞ்சாப், ஹரியானா சண்டிகர், டெல்லி மேற்கு உத்தரப் பிரதேசம், ஏப்.29, 30 இரண்டு நாட்களும் ராஜஸ்தானில் புழுதிப்புயல், இடியுடன் கூடிய மிகக் குறைந்த மழை பெய்யக்கூடும். இதற்கிடையில், மே 2ம் தேதி முதல் வடமேற்கு பகுதிகளிலும், மே 2 - 4 ம் தேதி வரையில் மேற்கு இமையமலைப்பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்தியாவில், நிலக்கரி பற்றாக்குறையால் மின்உற்பத்தி நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில், இந்தியாவை வெப்ப அலைகள் தாக்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் முக்கியமான கட்டிடங்கள், மருத்துவமனைகள், காடுகளில் தீப்பிடிக்கும் சம்பவங்களும் நடப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT