'குடியரசுத் தலைவராவது எனது நோக்கமல்ல; நாட்டின் பிரதமராவதே எனது கனவு' - மாயாவதி

மாயாவதி | கோப்புப்படம்.
மாயாவதி | கோப்புப்படம்.
Updated on
1 min read

புதுடெல்லி: "குடியரசு தலைவராவது எனது நோக்கமல்ல; உ.பி. முதல்வராகி அதன்பிறகு நாட்டின் பிரதமராவதே எனது கனவு" என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தலைவர் மாயாவதியை பாஜக குடியரசு தலைவராக்குமா? என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்சிங் யாதவ் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், "குடியரசு தலைவராவது எனது நோக்கமல்ல; உ.பி. முதல்வராகி அதன்பிறகு நாட்டின் பிரதமராவதே எனது கனவு" என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி , "இனி உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள் இல்லை. அக்கட்சித் தலைவர் அகிலேஷ் மீது முஸ்லிம்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். இதனால், அகிலேஷ் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் சூழல்களும் வரலாம். எனது கனவு. இந்தியாவின் குடியரசுத் தலைவராக அமர்வது அல்ல. உ.பி.யின் முதல்வராகவும், பின்னர் நாட்டின் பிரதமராகவும் அமர்ந்து மக்களுக்குப் பணி செய்வதே ஆகும். ஆனால், எம் மீது சமாஜ்வாதி கட்சியினர் ஊகத்தின் அடிப்படையில் பல்வேறு தகவல்களை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது.

சமாஜ்வாதியின் தவறான நடவடிக்கையால் தான் உ.பி. தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலில் மதரீதியானப் பிரச்சராத்தை சமாஜ்வாதியினர் தொடங்கியதால் தான் பாஜக லாபம் பெற்றது.

மேலும் உ.பி.யின் முஸ்லிம்கள் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகளின் பலம் அதிகம். ஆகையால் இந்த இரண்டு சமூகத்தினரும் இணைந்து யாரை விரும்புகின்றனரோ அவரே உ.பி.யில் முதல்வராக முடியும்.

தற்போது நடைபெறும் ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்கும் முஸ்லிம்களுக்கு தொல்லையாக மின்வெட்டுக்கள் செய்வது சரியல்ல. இப்பிரச்சனையில் உ.பி. அரசு தலையிட்டு மின்வெட்டில்லாத சூழலை ஏற்படுத்த வேண்டும்.'' எனத் தெரிவித்தார்.

முன்னதாக எம்எல்ஏவான பின் முதன்முறையாக தனது கர்ஹால் தொகுதிக்கு நேற்று வந்த அகிலேஷ்சிங் யாதவ் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். அப்போது அவர், "உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மாயாவதி கட்சியின் வாக்குகளைப் பெற்று ஆட்சியை பிடித்தற்காக பாஜக என்ன செய்யப் போகிறது? இதற்காக அவரை இந்திய குடியரசு தலைவராக அமர்த்துமா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்தே தலைவர் மாயாவதி இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது கண்டனத்தை அகிலேஷுக்கு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in