Published : 28 Apr 2022 07:07 AM
Last Updated : 28 Apr 2022 07:07 AM
புதுடெல்லி: கரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடிநேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழுவதுமாக நீங்கவில்லை. ஒமைக்ரான் வகை மாறுபாடுகள் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கின்றன. அதனால் விஞ்ஞானிகள், நிபுணர்கள் ஆலோசனைகளின் படி முன்கூட்டியே, திறம்படவும், கூட்டு அணுகுமுறையுடனும் நாம் செயல்பட வேண்டும். பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை போன்ற வியூகங்களை திறம்பட அமல்படுத்த வேண்டும்.
கரோனா வைரஸின் தற்போதைய சூழ்நிலையில், தீவிர காய்ச்சலுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு 100 சதவீத ஆர்டி-பிசிஆர் பரிசோதனை அவசியம். தற்போது கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால், தீ விபத்து சம்பவங்களை தடுக்க, அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் தீவிரப்படுத்த வேண்டும்.
எரிபொருட்களுக்கான வாட் வரியை மத்திய அரசு கடந்தாண்டு நவம்பர் மாதம் குறைத்தது. ஆனால் சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்கவில்லை. இதனால், பெட்ரோல், டீசல் விலை அந்த மாநிலங்களில் தொடர்ந்து அதிகமாக உள்ளன. இது அந்த மாநில மக்களுக்கான அநீதி மட்டும் அல்ல, பக்கத்து மாநிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நான் எந்த மாநிலத்தையும் விமர்சிக்கவில்லை. உங்களுடன் ஆலோசிக்கிறேன், அவ்வளவுதான். மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரபிரதேசம், கேரளா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வாட் வரியை குறைத்து அதன் பயன்களை மக்களுக்கு அளிக்க வேண்டும்.
வரியை குறைத்தால் வருமானம் குறைவது இயற்கையான விஷயம். ஆனால் பல மாநிலங்கள் நேர்மறையான நடவடிக்கையை எடுத்தன. கர்நாடக மாநிலம் வாட் வரியை குறைக்காமல் இருந்திருந்தால், கடந்த 6 மாதங்களில் ரூ.5,000 கோடி வருமானம் ஈட்டியிருக்கும். குஜராத் வரியை குறைக்காமல் இருந்திருந்தால், ரூ.4,000 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டியிருக்கும். வாட் வரியை குறைக்காத மாநிலங்கள், பல ஆயிரம் கோடி கூடுதல் வருவாயை ஈட்டியுள்ளன.
மத்திய அரசின் வருவாயில் 42 சதவீதம் மாநிலங்களுக்கு செல்கிறது. உலகளாவிய நெருக்கடி நேரத்தில், அனைத்து மாநிலங்களும், கூட்டாட்சி முறையை பின்பற்றி செயல்பட வேண்டும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
இந்த கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா, உ.பி. முதல்வர் ஆதித்யநாத், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT