Last Updated : 28 Apr, 2022 05:47 AM

 

Published : 28 Apr 2022 05:47 AM
Last Updated : 28 Apr 2022 05:47 AM

தாஜ்மகாலுக்கு வந்த அயோத்தி மடத்தின் துறவி: பிரம்மதண்டத்துடன் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை

புதுடெல்லி: ஆக்ராவின் தாஜ்மகாலுக்கு அயோத்தி மடத்தின் தலைவர் துறவி பரமஹன்ஸ் தாஸ் தனது சீடர்களுடன் வந்திருந்தார். பிரம்மதண்டத்துடன் உள்ளே செல்ல மத்திய பாதுகாப்பு போலீஸார் அனுமதி மறுத்தது சர்ச்சையாகிவிட்டது.

முகலாய மன்னர் ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டியது தாஜ்மகால். உலகின் ஏழாவது அதிசயமான தாஜ்மகாலை பல்வேறு தரப்பினர் பல காரணங்களுக்காகக் காண விரும்புவது உண்டு. இந்தவகையில் அயோத்தி ராம் ஜானகி மடத்தின் தலைவரான துறவி பரமஹன்ஸ் தாஸ் தனது இரண்டு சீடர்களுடன் நேற்று முன்தினம் மாலை ஆக்ரா வந்திருந்தார்.

இவர்களுடன் உ.பி. காவல் துறையின் துப்பாக்கி ஏந்திய போலீஸாரும் இருந்தனர். போலீஸாரை வெளியே நிறுத்திவிட்டு, அங்குள்ள தாஜ்மகாலில் சீடர்களுடன் நுழைவதற்கான அனுமதிச் சீட்டுகளை துறவி பரமஹன்ஸ் பெற்றார். இவர்களுக்கு வழக்கம் போல் அதன் வாயிலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் (சிஐஎஸ்எப்) சோதனை செய்யப்பட்டது.

இதில் பரமஹன்ஸ் கையில் காவித் துணியால் போர்த்தப்பட்ட பிரம்மதண்டம் இருந்தது. இது இரும்பினால் ஆனது என்பதால், பாதுகாப்பு பிரச்சினை கருதி பிரம்மதண்டத்துடன் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. தண்டத்தை தாஜ்மகால் வாசலில் கொடுத்து விட்டு, திரும்பச் செல்லும்போது பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்கு துறவி பரமஹன்ஸ் மறுத்ததால் அவரது நுழைவுச் சீட்டுக்கான தொகை திரும்ப அளிக்கப்பட்டது.

இதனால் தாஜ்மகாலில் நுழைய முடியாமல் துறவி பரமஹன்ஸ் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். இதில், அவருக்கும் அங்கு பாதுகாப்பில் இருந்த சிஐஎஸ்எப் வீரர்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

பிறகு செய்தியாளர்களிடம் துறவி பரமஹன்ஸ் கூறும்போது,“நான் காவி உடை அணிந்திருப்பதால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தாஜ்மகாலின் உள்ளே இருக்கும் சிவன் கோயிலை தரிசிக்க நான் வந்திருந்தேன். இது இந்து மதத்திற்கு செய்யப்பட்ட அவமானம்” என்றார்.

இதையடுத்து துறவி பரமஹன்ஸ் நுழைவு விவகாரத்தில் இந்திய தொல்பொருள் ஆய்வுக்கழகத்தின் (ஏஎஸ்ஐ) ஆக்ரா அலுவலக தலைமை கண்காணிப்பாளர் ராஜ் குமார் படேல் விசாரணை நடத்தினார்.

தடை ஏன்?

இதன் முடிவில் அவர் கூறும்போது, “தாஜ்மகாலின் உள்ளே இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைய தடை இருப்பதால் துறவிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தாஜ்மகாலுக்கு உள்ளே எந்தவிதமான பிரச்சார நடவடிக்கைக்கும் அனுமதியில்லையே தவிர மத அடையாள உடைகளுக்கு தடையில்லை” என்றார்.

இதனிடையே துறவி பரமஹன்ஸுக்கு அனுமதி மறுப்பு விவகாரம் சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக உ.பி.யின் ஒரு குறிப்பிட்ட துறவிகள் சிஐஎஸ்எப் மற்றும் ஏஎஸ்ஐ அதிகாரிகளை கண்டித்துள்ளனர். இவர்களில் ஒரு துறவியான மஹந்த் தர்மேந்திர கிரி கோஸ்வாமி தனது ட்விட்டர் பதிவில், “இந்த நாட்டின் பிரதமராக நரேந்திர மோடியும், உ.பி.முதல்வராக யோகி ஆதித்யநாத்தும் இந்துக்களான பலர் மத்திய அமைச்சர்களாகவும் உள்ளனர். இதன் பிறகும், மஹந்த் பரமஹன்ஸுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

அயோத்தியின் சிறிய மடங்களில் ஒன்றான ராம் ஜானகி மடத்தின் தலைவரான பரமஹன்ஸ், ஆன்மீகப் பணிக்காக அலிகர் வந்திருந்தார். திரும்பும் வழியில் அருகிலுள்ள ஆக்ராவுக்கு சென்றிருந்தார். இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் ஆவார். இந்தியாவில் இந்து ராஜ்ஜியம் அமைக்கப்பட வேண்டும் எனவும், முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வலியுறுத்தியும் இவர் இரண்டு முறை அயோத்தியில் இருந்த உண்ணாவிரதமும் சர்ச்சைக்குள்ளானது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x