Published : 04 Apr 2014 01:26 PM
Last Updated : 04 Apr 2014 01:26 PM

ஆர்எஸ்எஸ் போல காங்கிரஸார் செயல்பட வேண்டும்: சர்ச்சையோடு பிரச்சாரம் தொடங்கினார் எஸ்.எம்.கிருஷ்ணா

பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை தக்கவைக்க வேண்டுமென்றால், காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்.எஸ்.எஸ். போல செயல்பட வேண்டும். அப்போதுதான் நரேந்திர மோடி எனும் தீயசக்தியை அழிக்க முடியும் என கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா ஆவேசமாக கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை முன்னுதாரணமாகக் காட்டிய அவருடைய பேச்சு காங்கிரஸ் தொண்டர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். சதாசிவ நகரில் நடைபெற்ற‌ பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியது: ''நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுவதாக பா.ஜ.க.வும், ஊடகங்களும் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன. தெருவில் இறங்கி மக்களிடையே பழகி, வாக்கு சேகரிக்கும் அனைவரும், இது முற்றிலும் பொய்யான அலை என்கிறார்கள்.

அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோரிடையே மறைமுகமாக பிரதமர் பதவிக்கு போட்டி நடந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க. தலைவர்களிடையே நடக்கும் பனிப்போரில் நிச்சயம் மோடி தோற்கடிக்கப்படுவார். குழப்பத்தில் தவிக்கும் பா.ஜ.க. தொண்டர்களே மோடிக்காக வாக்களிக்க மாட்டார்கள்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைப்போல ஓயாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும். அவர்க‌ளைப்போல வாக்காளர்களை நேரில் சந்தித்து நம்முடைய (காங்கிரஸ்) ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்காளர்களை கவர வேண்டும்.

வாக்குப்பதிவின்போது மூத்த வாக்காளர்களை வாக்குசாவடிக்கு அழைத்து செல்வது, உதவி செய்வது போன்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகளை காங்கிரஸார் கற்றுக்கொள்ள வேண்டும்' என எஸ்.எம்.கிருஷ்ணா பேசினார்.

தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். போல செயல்பட வேண்டும் என‌ எஸ்.எம்.கிருஷ்ணா பேசியதால் கூட்டத்தில் இருந்த காங்கிரஸார் குழம்பினர். ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிரான அரசியலை கொண்ட காங்கிரஸ் தலைவரே, அந்த அமைப்பை பின்பற்ற சொல்கிறாரே என கேள்வி எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x