

தனக்கான தேநீரை சற்று தாமதமாக வழங்க வேண்டுகோள் விடுத்த பயணி ஒருவருக்கு இஃப்தார் உணவளித்து இந்திய ரயில்வே அளித்துள்ள இன்ப அதிர்ச்சி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
வெறுப்பு பேச்சு, ஹனுமன் சாலிசா, ஒலிப் பெருக்கி பிரச்சினை என மதத்தின் பெயரால் சலசலப்பு அரசியல் பரபரப்புகளுக்கிடையில், அதைத் தாண்டிய மனித செயல்பாடுகள் எங்கேயாவது ஓர் இடத்தில் நடந்து கொண்டும், அந்த உண்மை, இந்தியாவின் ஒருமைப்பாட்டை இந்த உலகிற்கு உரக்கச் சொல்லிக்கொண்டும் இருக்கின்றன. அப்படி ஒரு உண்மைக்கு சமீபத்திய சாட்சியாகியிருக்கிறார் ஷாநவாஸ் அக்தர் என்கிற ஒரு பயணி.
ஷாநவாஸ் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹவுரா சதாப்தி ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது தனக்கு வழங்கப்பட இருக்கும் தேநீரை சற்று தாமதமாக தரும்படி ரயில் பணியாளரிடம் தெரிவித்திருக்கிறார். அதற்கு அந்தப் பணியாளர், "நீங்கள் நோன்பில் இருக்கிறீர்களா?" என்று ஷாநவாஸிடம் கேட்டிருக்கிறார். ஷாநவஸும் 'ஆம்' என்பதாக தலையாட்டியிருக்கிறார்.
அதன் பிறகு நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம். அவர் வேண்டுகோள் விடுத்தது போவே சற்று தாமதாமாகவே ரயில் பணியாளர் ஒருவர், ஷாநவாஸை அணுகியுள்ளார். வந்தது தேநீர் இல்லை... ஷாநவாஸூக்கான இஃப்தார் உணவு. அவர் நோன்பு இருப்பதை அறிந்ததும் ஒரு தட்டில், கொஞ்சம் பழங்கள் மற்றும் சிற்றுண்டியை வைத்து அளித்துள்ளது இந்திய ரயில்வே நிர்வாகம். இதனால் நெகிழ்ந்து போன ஷாநவாஸ் அந்த உணவைப் படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடும்போது, "இஃப்தார் விருந்து அளித்தற்காக இந்திய ரயில்வேக்கு நன்றி. நான் தன்பாத்தில் ஹவுரா சதாப்தியில் ஏறியவுடன், எனது சிற்றுண்டிகள் கிடைத்தன. நான் விரதம் இருப்பதால் சிறிது தாமதமாக தேநீர் கொண்டு வருமாறு அந்த ஊழியரிடம் கேட்டுக் கொண்டேன். அவர், 'நான் நோன்பு இருக்கிறேனா?' எனக் கேட்டு உறுதிப்படுக்கொண்டார். நான் ஆம் என்று தலையசைத்தேன். பின்னர் இஃப்தார் உடன் வேறு ஒருவர் வந்தார்" என்று தெரிவித்திருந்தார்.
இந்திய ரயில்வேயின் இந்தச் செயல் சமூக வலைதளத்தில் பாராட்டு பெற்றுவருகிறது. பலர் ரயில்வேயின் செயலைப் பாராட்டி பதிலளித்துள்ளனர். மாதேவ் திவாரி என்பவர், "நல்ல தொடக்கம்" என்றும், பிரியங்கா என்பவர் "விதிவிலக்குகளைக் கொண்டாடுங்கள். ஒருநாள் அது விதியாகலாம்" என்றும், அய்னுல் ஹூடாஅன்சாரி, "நல்ல செயல்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சித்ராக்ஷி விஜி என்பவர், "இதுதான் இந்தியா. நான் அங்குதான் வளர்ந்தேன். எல்லா மக்களுக்கும் மதங்களுக்கும் மதிப்புண்டு. என் குழந்தைகளையும் அங்கு வளர்க்க முடியும்" என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர்.