Published : 26 Apr 2022 05:52 AM
Last Updated : 26 Apr 2022 05:52 AM

ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளில் 3-வது இடத்தில் இந்தியா

ஸ்டாக்ஹோம்: நாட்டின் பாதுகாப்புக்காக ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இத்தகவலை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் (எஸ்ஐபிஆர்ஐ) தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் உலக நாடுகள் ராணுவத்துக்காக செலவிடும் தொகை 2021-ம் ஆண்டில் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மொத்த செலவு 2,11,300 கோடி டாலராகும். இதில் அதிக அளவு செலவிட்ட நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாமிடத்தில் சீனாவும் உள்ளன. இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகியன நான்காவது மற்றும் ஐந்தாமிடங்களில் உள்ளன. மொத்த செலவில் இந்த 5 நாடுகளின் பங்கு மட்டும் 62 சதவீதமாக உள்ளதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா 80,100 கோடி

அமெரிக்கா ராணுவத்துக்கான ஒதுக்கீடு 80,100 கோடி டாலராகும். ராணுவத்துக்கான சீனாவின் ஒதுக்கீடு 29,300 கோடி டாலராகும். இந்தியா ராணுவத்துக்கு செலவிட்ட தொகை 7,660 கோடி டாலராகும்.

இங்கிலாந்தின் ராணுவ ஒதுக்கீட்டு தொகை 6,840 கோடி டாலராகும். ரஷ்யாவின் ராணுவ ஒதுக்கீடு 6,590 கோடி டாலராகும். மியான்மருக்கு இந்தியாவில் இருந்து அதிக அளவில் ராணுவ உதிரி பாகங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையான காலத்தில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ராணுவ உதிரி பாகங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை மியான்மருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ஏற்றுமதி

மியான்மருக்கு அதிக அளவில் ராணுவ உதிரி பாகங்களை சப்ளை செய்த நாடுகளின் பட்டியலில் சீனா (36%) முதலிடத்திலும், ரஷ்யா (27%) இரண்டாமிடத்திலும் உள்ளது. மூன்றாவது இடத்தை இந்தியா (17%) பிடித்துள்ளது. 2021-ம் ஆண்டு மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்ட காலத்திலிருந்து அந்நாட்டுக்கு ராணுவ உதிரிபாகங்கள் வரத்து குறித்த விவரங்களை இந்த ஆய்வு மையம் சேகரித்து வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x