Published : 24 May 2016 05:40 PM
Last Updated : 24 May 2016 05:40 PM

அசாம் முதல்வராக பதவியேற்றார் சர்பானந்த சோனோவால்

அசாம் மாநில முதல்வராக பாஜகவின் சர்பானந்த சோனோவால் இன்று பதவியேற்றார். பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வுக்கு 60 இடங்களும், அதன் கூட்டணி கட்சிகளான அசாம் கணபரிஷத் கட்சிக்கு 14 இடங்களும், போடோ மக்கள் முன்னணிக்கு 12 இடங்களும் கிடைத்தன. இதன் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக அசாமில் நடைபெற்று வந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது.

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சர்பானந்த சோனோவால் அசாம் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மஜுலிலாக் தொகுதியில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தலைநகர் குவஹாத்தியில் உள்ள கனபாரா திறந்த வெளி திடலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சோனோவால் அசாமின் முதல் பாஜக முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் பி.பி.ஆச்சாரியா, சோனோவாலுக்கும் அவருடன் பதவியேற்ற அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

சோனாவால் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது:

அசாம் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இவர்கள் வளர்ச்சி குறித்து கனவு கண்டனர்.இதனால் சோனோவாலுக்கு ஒரு வாய்ப்பு அளித்துள்ளனர். இவர் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த தலைவர், மக்களுக்குச் சேவையாற்றுவதில் அர்ப்பணிப்பு உள்ளம் கொண்ட சோனோவால் அசாம் முதல்வராகியுள்ளார்.

அசாம் மாநில முன்னேற்றத்துக்காக அவர் அனைத்தையும் செய்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மத்திய அரசு கூட்டுறவுக் கொள்கையுடைய கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்டது, எனவே மாநிலங்களுக்கு நாங்கள் வலுவூட்டுவோம்.

ஜனநாயகம் என்பது பங்கேற்பு பற்றியது. வளர்ச்சியில் மத்திய அரசும் மாநில அரசும் தோளுக்குத்தோள் இணைந்து செல்ல வேண்டும்.

இந்தியாவின் முன்னேற்றம் அனைத்து தரப்பாகவும், அனைவரையும் உள்ளடக்கியதுமாக இருக்க வேண்டும். வளர்ச்சிப் பயணத்தில் கிழக்குப் பகுதிகள் மட்டும் தனித்து விடப்பட முடியாதது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x