Published : 25 Apr 2022 12:59 PM
Last Updated : 25 Apr 2022 12:59 PM
சண்டிகர்: பஞ்சாப்பில் உள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஒருவர், கடவுள் ராமர் குறித்து தரக்குறைவான விமர்சனத்தை தனது பேஸ்புக்கில் பகிர்ந்ததாகக் கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப்பில் உள்ள லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் குர்சங் பீரித் கவுர். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ராமர் குறித்து தரக்குறைவான வார்த்தைகள் இடம்பெற்ற வீடியோவை பதிவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து அவரது வீடியோ பதிவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் உதவிப் பேராசிரியர் குர்சங் பீரித் கவுரை லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஒருவர் தனிப்பட்ட முறையில் ஷேர் செய்திருந்த வீடியோவால் பலரும் புண்பட்டிருப்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் அவரது செயல்பாடுகளுக்கும் பல்கலைகழகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இங்கு அனைத்து மதங்களுமே சமமான அன்புடன் மதிக்கப்படுகிறது.
சர்ச்சை வீடியோவை பதிவிட்ட உதவிப் பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்காக நாங்கள் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பேராசிரியரோ, தான் பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து கருத்து எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT