Published : 25 Apr 2022 10:23 AM
Last Updated : 25 Apr 2022 10:23 AM

'ஹிஜாப்' சர்ச்சையைத் தொடர்ந்து கர்நாடக பள்ளிக் கூடத்தில் எழுந்துள்ள 'பைபிள்' பிரச்சினை

பெங்களூரு: பள்ளிக்கு பிள்ளைகள் பைபிள், கிறிஸ்தவப் பாடல் புத்தகங்களைக் கொண்டு வர அனுமதிப்பீர்களா என்று கர்நாடக பள்ளி ஒன்று பெற்றோரிடம் ஒப்புதல் படிவம் கொடுத்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெங்களூருவின் புகழ்பெற்ற க்ளாரன்ஸ் ஹை ஸ்கூல் சார்பில் 11 ஆம் வகுப்பில் சேர்வோருக்கான விண்ணப்பப் படிவத்துடன் இந்த ஒப்புதல் படிவமும் கொடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வருவது பெரும் சர்ச்சைகளுக்கு இடையே தடை செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் சூழலில், மாணவிகள் தேர்வுகளைப் புறக்கணித்து கல்வி எதிர்காலத்தை இழந்து நிற்கின்றனர்.

இந்நிலையில் கர்நாடகாவின் க்ளாரன்ஸ் ஹை ஸ்கூலில் மாணவர்கள் பைபிள் கொண்டுவர பெற்றோரிடம் அனுமதிக் கடிதம் கேட்கப்பட்டது சர்ச்சையாகி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ளது க்ளாரன்ஸ் ஹை ஸ்கூல். இப்பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் பெற்றோரின் உறுதிமொழி கோரப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், மாணவர்கள் பள்ளிக்கு பைபிள், வேதப் பாடல் புத்தகங்களைக் கொண்டு வருவதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்பதைத் தெரிவிக்கக் கூறியுள்ளது. காலை பள்ளி ஒன்றுகூடல் பிரார்த்தனைக்காகவும், மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் ஆன்மிக நலத்துக்காகவும் பைபிளைக் கொண்டுவர சம்மதம் என்பதைத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைகான விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கைக்கு இந்து அமைப்புகள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்து ஜனஜக்ருதி சமிதியின் மாநில செய்தித் தொடர்பாளர் மோகன் கவுடா, பள்ளி நிர்வாகம் கிறிஸ்துவர்கள் அல்லாத குழந்தைகளையும் பைபிளைக் கட்டாயமாக வாசிக்க வற்புறுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில், மாநில பாடத்திட்டத்தில் பகவத் கீதையை இணைப்பது குறித்து தகுந்த ஆலோசனைக்குப் பின்னர் முடிவு எட்டப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்திருந்தது.

முன்னதாக, குஜராத் அரசு கடந்த மார்ச் 17 ஆம் தேதி முதல் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பகவத் கீதையை பாடத்திட்டத்தில் இணைத்துள்ளது. இந்திய பாரம்பரியம், பெருமையை அறிய உதவும் என்று தெரிவித்தது.

ஆனால், கர்நாடக பள்ளியில் மாணவர்கள் பைபிள் கொண்டு வர எதிர்ப்பு அலைகள் கிளம்பியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x