

கடந்த சில நாட்களாகவே டெல்லி ஜஹாங்கிர்புரி இந்து, முஸ்லிம் மோதலின் அடையாளமாக பேசப்பட்ட நிலையில் அப்பகுதி வாழ் இந்து, முஸ்லிம் மக்கள் இணைந்து நேற்று மேற்கொண்ட மூவர்ணக் கொடி ஊர்வலம் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக மாறியுள்ளது.
டெல்லி ஜஹாங்கிர்புரி சி மற்றும் டி ப்ளாக் பகுதிவாசிகள் இந்த யாத்திரையில் கலந்து கொண்டனர். அந்த ஊர்வலம் சென்ற வழியில் இருந்த குடியிருப்புகளில் வசித்தோர் ஊர்வலத்தை மலர் தூவி வரவேற்றனர். மாலை 6 மணியளவில் தொடங்கிய ஊர்வலம் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்துவதாக அமைந்தது.
ஊர்வலத்தில் இளைஞர்கள், முதியோர் என அனைத்து வயதினரும் இடம்பெற்றிருந்தனர். 'பாரத் மாதா கி ஜே' மற்றும் ', முஸ்லிம்களும் இணைந்தே வாழ்கின்றனர்' போன்ற கோஷங்கள் முழங்கின. ஊர்வலத்தில் 50 பேர் தான் பங்கேற்றிருந்தனர் என்றாலும் கூட, போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். வடமேற்கு டெல்லி காவல் துணை ஆணையர் உஷா ரங்நானி பாதுகாப்புப் பணிகளை மேற்பார்வை செய்தார்.
சம்பவப் பின்னணி: டெல்லியில் உள்ள ஜஹாங்கிபுரி பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது ஒரு தரப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த வன்முறையில் போலீஸார் உட்பட பலர் காய மடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். வன்முறைக்கு முக்கிய காரணமான அன்சர் என்பவர் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். அன்சர் உட்பட 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் காலை புல்டோசர்கள் மூலம் அகற்றப்பட்டன. வீடுகள், கட்டிடங்கள் புல்டோசர்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தையும் மகாராஷ்டிரா கோரேகான் சம்பவத்தையும் தொடர்புபடுத்தி பாஜக புல்டோசர் பாலிடிக்ஸ் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.