

மத்திய ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்க ரகுராம் ராஜனுக்கு தகுதியில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்க ரகுராம் ராஜனுக்கு தகுதியில்லை. ‘வேலையில்லாத் திண்டாட்டம், வீழ்ச்சி’ ஆகியவற்றுக்கு இவரே காரணம் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
பாராளுமன்ற இல்லத்தில் செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:
ஆர்பிஐ கவர்னராக பணியாற்ற அவர் (ராஜன்) தகுதியற்றவர். அவர் கவர்னராக இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல. ஆனால் நான் அவரைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்துகிறேன் என்ற பெயரில் வட்டி விகிதங்களை அதிகரித்தார். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சேதப்படுத்தினார்.
இவரது செயல்பாடுகளினால் தொழிற்துறை வீழ்ச்சி கண்டது, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. எனவே அவரை எவ்வளவு சீக்கிரம் சிகாகோ அனுப்புகிறோமோ அது நாட்டுக்கு நல்லது, என்றார்.
ரகுராம் ராஜன் சிகாகோ பல்கலைக் கழக பேராசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 2013-ல் ஆர்பிஐ கவர்னராக பொறுப்பேற்ற அவர், குறுகியகால கடன் வட்டி விகிதத்தை 7.25%-லிருந்து 8% ஆக அதிகரித்தார். 2014 முழுதும் உயர் வட்டி விகிதத்தையே வைத்திருந்தார். பணவீக்க விகிதத்தை குறைக்க அவர் வட்டி விகிதத்தை அதிகமாகவே வைத்திருந்தார். நிதியமைச்சகம் நெருக்கடி அளித்தும் கூட பணவீக்க விகிதம் குறைவதையே ரகுராம் ராஜன் விரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. ’
2015-ம் ஆண்டு முதல்தான் வட்டி விகிதக் குறைப்பு நடவடிக்கையை ரகுராம் ராஜன் மேற்கொண்டார்.