வன்முறையை தூண்டும் தகவலை பரப்ப வேண்டாம்: சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவு

வன்முறையை தூண்டும் தகவலை பரப்ப வேண்டாம்: சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Published on

புதுடெல்லி: ஆதாரமற்ற, வன்முறையை தூண்டும் தகவல்களை பரப்ப வேண்டாம் என தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அண்மையில் நடந்த சில நிகழ்ச்சிகள் தொடர்பான ஆதாரமற்ற, தவறான, வன்முறையை தூண்டக்கூடிய தகவல்களை தனியார் தொலைக்காட்சி சேனல்கள் பரப்பியது தெரியவந்துள்ளது. இது மத ரீதியிலான மோதலுக்கு வழி வகுத்தது. இது சட்ட விதிகளை மீறும் செயலாகும்.

குறிப்பாக, டெல்லியில், கடந்த வாரம் ராம நவமி மற்றும் ஹனுமன் ஜெயந்தி அன்று நடந்த ஊர்வலத்தின் போது ஜஹாங்கிர்புரியில் வன்முறை வெடித்தது.

இது தொடர்பான செய்திகளை ஒளிபரப்பிய சேனல்கள், ஆதாரமற்ற சில தகவல்களை பரப்பியதுடன் வன்முறையைத் தூண்ட கூடிய வீடியோக்களையும் வெளியிட்டன. இதுபோல ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் தொடர்பாகவும் ஆதாரமற்ற தகவல்களை சில சேனல்கள் பரப்பி வருகின்றன.

மேலும் குறிப்பிட்ட ஒரு சம்பவம் தொடர்பான விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சிலர், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதுவதுடன் பிறரை ஆத்திரமூட்டும் வகையிலும் மத மோதலை ஊக்குவிக்கும் வகையிலும் பேசுவதைப் பார்க்க முடிகிறது.

இது சமூகத்தில் மத ரீதியிலான மோதலுக்கு வழிவகுப்பதுடன் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் உள்ளது. எனவே, ஆதரமற்ற, வன்முறையைத் தூண்டும் தகவல்களை பரப்புவதை தொலைக்காட்சி சேனல்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in