

உச்ச நீதிமன்ற நீதிபதியாக கோபால் சுப்பிரமணியத்தை நியமிப்பதற்கான பரிந்துரையை நிராகரித்ததன் மூலம் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பாரபட்சமாகவும், நீதித்துறையின் சுதந்திரத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க மோடி அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
இதனால், நீதிபதி நியமனப் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவுக்கு கோபால் சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதி நியமனக் குழு முறைப்படி அனுப்பிய நான்கு பேரில், கோபால் சுப்பிரமணியத்தின் பெயரை மட்டுமே மத்திய அரசு நிராகரித்துள்ளது.
பாஜகவைச் சேர்ந்த அமீத் ஷாவுக்கு எதிரான போலி என்கவுன்ட்டர் வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவியாக கோபால் சுப்பிரமணியம் பணி புரிந்தமைக்காக, அவரை இப் போது மோடி அரசு தண்டித் துள்ளது.
மோடி அரசின் இந்த செயல் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு குந்தகம் விளைவிப்பதாகும். பாரபட்சமான இந்த நடவடிக் கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை உச்ச நீதிமன்றம் சரிசெய்ய வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.