ஹைதராபாத்: சிங்க குகைக்குள் குதித்த போதை இளைஞர் மீட்பு

ஹைதராபாத்: சிங்க குகைக்குள் குதித்த போதை இளைஞர் மீட்பு
Updated on
1 min read

குடி போதையில் ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கக் குகைக்குள் குதித்த ராஜஸ்தான் இளைஞர் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட அந்த நபரை பூங்கா அதிகாரிகள் போலீஸில் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீஸார், "நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நேரு விலங்கியல் பூங்காவிற்கு வந்த 35 வயது முகேஷ் திடீரென சிங்கக் குகைக்குள் குதித்தார். குகையைச் சுற்றி செயற்கையாக வெட்டப்பட்ட அகழியில் அவர் விழுந்தார். சத்தம் கேட்டு குகைக்குள் இருந்த 2 சிங்கங்கள் அவரை நோக்கி வந்தன.

இதனைப் பார்த்த பொதுமக்கள் கற்களை வீசி சிங்கங்களை விரட்ட முயன்றனர். முகேஷையும் வெளியே வருமாறு கூறினர். ஆனால், அவர் அதை கேட்கவில்லை. குடி போதையில் இருந்த அந்த நபர் சிங்கத்தைப் பார்த்து 'டார்லிங் என் அருகே வா' என பிதற்றியுள்ளார். அதற்குள் பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

சிங்கங்களுக்கு உணவு கொடுக்கும் நேரம் என்பதால், வழக்கமாக அவற்றிற்கு உணவு வழங்கும் ஊழியர் பாப்பையா அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் சிங்கங்களுக்கு உணவை வைத்து ஓசை எழுப்பி அவற்றை திசை திருப்பினார். சிங்கங்கள் அதன் உணவை நோக்கிச் சென்றன.

பொதுவாக சிங்கங்கள் தண்ணீரில் இறங்க தயங்கும். இதுவே புலியின் குகையில் இருக்கும் அகழியாக இருந்திருந்தால் முகேஷ் புலிக்கு இரையாகியிருப்பார்.

சிங்கங்கள பாப்பையா வைத்த உணவை நோக்கி திரும்பிய நேரம் பூங்கா ஊழியர்கள் பெரிய மூங்கில் கொம்பை குகைக்குள் செலுத்தி அதை பிடித்துக் கொண்டு வெளியே வருமாறு முகேசிடம் கூறினர். சற்றே போதை தெளிந்த முகேஷ் அந்த கொம்பை பிடித்து வெளியே வந்தார். பூங்கா அதிகாரிகள் முகேஷை எங்களிடம் ஒப்படைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் சிங்கத்தை அருகில் பார்த்து அதனுடன் கைகுலுக்க ஆசைப்பட்டதால் குகைக்குள் குதித்ததாக முகேஷ் தெரிவித்தார். இருப்பினும் அவருக்கு போதை முழுமையாக தெளிந்தவுடன் மீண்டும் விசாரணை நடத்துவோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in