

புதுடெல்லி: டெல்லியில் கலவரம் நடந்த ஜஹாங்கீர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு எனக் கூறி இடிக்கப்பட்ட தந்தையின் கடையின் இடிபாடுகளிலிருந்து, கீழே விழுந்து சிதறிக் கிடக்கும் நாணயங்களைச் சேரிக்கும் சிறுவனின் படம் ஒன்று அனைவரின் இதயத்தையும் கனக்கச் செய்திருக்கிறது.
தன்னைச் சுற்றிலும் ஆட்களும், ஊடகங்களின் கேமராக்களும் பார்த்துக் கொண்டிருக்க, எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல், இடிக்கப்பட்ட கடை ஒன்றின் இடிபாடுகளுக்குள் சிதறிக் கிடக்கும் நாணயங்களை பதைபதைக்கும் மனம், பதற்றத்துடன் சிறுவன் ஒருவன் சேகரித்துக் கொண்டிருக்கும் காட்சி ஒன்று இன்று தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது.
அந்தச் சிறுவனில் பெயர் ஆசிஃப் என்றும், அந்த இடிக்கப்பட்ட கடை ஆசிஃப் தந்தையின் ஜூஸ் கடை என்றும் தெரியவந்துள்ளது. ஆசிஃப் வீடு மற்றும் தந்தையின் கடை வடமேற்கு டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்புரி பகுதியில் இருந்திருக்கிறது. அங்கு புதன்கிழமை காலையில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடங்களை புல்டோசர் கொண்டு இடிக்கும் நடவடிக்கையில், ஆசிஃபின் வீடும் தந்தையின் கடையும் இடிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, டெல்லியில் ஜஹாங்கீர்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று நடந்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் இரண்டு பிரிவினர்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. இதில் போலீஸார் உட்பட பலர் காயமடைந்தனர். இந்தக் கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி போலீஸாருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, ஜஹாங்கீர்புரியில் கலவரம் நடந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் புதன்கிழமைக் காலையில் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேச மாநிலங்களில் மத மோதல்கள் ஏற்பட்ட இடங்களில் ஒரு தரப்பினரின் வீடுகள் குறிவைத்து புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டதைப் போல டெல்லியிலும் இடிக்கப்படுவதாகவும் இதை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஆக்கிரமிப்புகளை அகற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். ஆக்கிரமிப்புகளை இடிக்க கூடாது என்றும், தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்றும் இந்த உத்தரவு உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார். அந்த இடைக்காலத் தடை நீட்டிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
- دانش رشی