Published : 21 Apr 2022 04:06 PM
Last Updated : 21 Apr 2022 04:06 PM

இந்தியாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் | உற்சாக வரவேற்பு முதல் அதானி சந்திப்பு வரை - அண்மைத் தகவல்கள்

கவுதம் அதானி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்

அகமதாபாத்: இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்ட போரிஸ் ஜான்சன் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

அதானியுடன் சந்திப்பு: இந்தியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று வியாழக்கிழமை காலை குஜராத் மாநிலம் அகமதாபாத் விமானநிலையம் வந்திறங்கினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்றார். நாளை அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருக்கிறார். இதற்கிடையில் அகமதாபாத்தில் உள்ள அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியை போரிஸ் ஜான்சன் இன்று சந்தித்தார்.

இதுகுறித்து, கவுதம் அதானி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அதானி குழுமத் தலைமையகத்திற்கு வருகை தந்திருக்கும் முதல் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டனும் இணைந்து பசுமை ஹெச்2 மற்றும் புதுப்பிக்கத்தக்க புதிய ஆற்றல்களில் கவனம் செலுத்துவதன் மூலம், காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை கொள்கையை ஆதரிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களை இருநாடுகளும் இணைந்து உருவாக்க பிரிட்டிஷ் நிறுனங்களுடன் சேர்ந்து பணிபுரிய இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.



முதல் பயணமும் எதிர்பார்ப்புகளும்: பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். இதற்கு முன்பு இரண்டு முறை இந்தியா வரத்திட்டமிட்டிருந்த அவரது பயணம் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தடைபட்டது. இந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் அகமதாபாத் விமானநிலையம் வந்து இறங்கினார். அங்கிருந்து அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். வழியில் சபர்மதி ஆசிரமம் சென்ற போரிஸ் ஜான்சன் அங்கு கை ராட்டையை இயக்கி நூல் நூற்றார்.

போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை மூலமாக, இரு நாடுகளுக்கும் இடையில், மென்பொருள், பொறியியல், சுகாதாரம் எனப் பல்வேறு துறைகளிலும் 1 பில்லியன் யூரோ அளவிற்கான மூதலீடுகள் மற்றும் ஏற்றுமதி ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட உள்ளன. அமதாபாத்தில் இன்று அறிவியல் சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் செய்யவுள்ள முதலீடுகளை அறிவிப்பார். நாளை வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பொருளாதாரம், பாதுகாப்பு துறைகளில் முதலீடு மற்றும் பாதுகாப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

முன்னதாக போரிஸ் ஜான்சன், "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இருப்பது அருமையாக இருக்கிறது. இரண்டு நாடுகளும் இணைந்து சாதிக்கக் கூடிய பரந்த சாத்தியக் கூறுகள் இருப்பதை நான் காண்கிறேன். எதிர்காலத்தில் இந்தக் கூட்டணி இன்னும் வலுபெறும் என நம்புகிறேன்" என்று ட்வீட் செய்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x