Published : 21 Apr 2022 05:25 AM
Last Updated : 21 Apr 2022 05:25 AM
புதுடெல்லி: பயன்பாடற்ற கடற்படை கப்பலை பிரம்மோஸ் ஏவுகணை துல்லியமாக தாக்கியதாகவும், சோதனை வெற்றி பெற்றதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தியா - ரஷ்ய கூட்டு முயற்சியில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள் மற்றும் தரை தளங்களில் இருந்து ஏவக்கூடியவை ஆகும்.
பிரம்மோஸ் ஏவுகணை 2.8 மேக் வேகத்தில் அல்லது ஒலியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும் வலிமை படைத்தவை.
இந்நிலையில் டெல்லியில் ஐ.என்.எஸ். டெல்லி ஏவுகணை அழிப்பு கப்பலில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை ஏவப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட மாடுலர் லாஞ்சரைப் பயன்படுத்தி ஏவப்பட்ட சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சீறி பாய்ந்து சென்று இலக்கை அழித்தது.
இந்த பிரம்மோஸ் ஏவுகணையானது பயன்பாடற்று நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக் கப்பலைத் துல்லியமாகத் தாக்கி அதில் ஒரு மிகப்பெரிய துளையை ஏற்படுத்தியது என கடற்படை தெரிவித்துள்ளது.
இதன் மூலம், பிரம்மோஸின் நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன், முன்னணி தளங்களில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட நெட்வொர்க் செயல்பாடுகள் மீண்டும் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று இந்தியக் கடற்படை வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இதேபோல் இந்திய விமானப்படை, கிழக்கு கடற்பரப்பில் சுகோய் போர் விமானத்தில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையை செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்தது.
இந்திய கடற்படையின் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் இந்த பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
மேலும் ஏவுகணைகள் ஏவி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட வீடியோவையும் கடற்படை தனதுட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT