Published : 20 Apr 2022 06:36 AM
Last Updated : 20 Apr 2022 06:36 AM

குஜராத்தில் உலக சுகாதார பாரம்பரிய மருத்துவ மையம் - பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

உலக சுகாதார அமைப்பின் சார்பில் குஜராத்தின் ஜாம்நகரில் உலக பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். உடன், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் உள்ளனர். படம்: பிடிஐ

ஜாம்நகர்: குஜராத்தின் ஜாம்நகரில் ரூ.250 கோடி செலவில் 35 ஏக்கர் பரப்பளவில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையத்துக்கான பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வங்கதேசம், பூடான், நேபாளத்தின் பிரதமர்கள் மற்றும் மாலத்தீவு அதிபர் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக விழாவில் உரையாற்றினர்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் பேசும்போது, "உலக பாரம்பரிய மருத்துவ மையத்தை இந்தியாவில் அமைக்க உதவிய பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பாரம்பரிய மருத்துவத்தின் பலன்களை உலகம் முழுவதும் இந்த மையம் கொண்டு செல்லும். உலக சுகாதார அமைப்பில் அங்கம் வகிக்கும் 107 நாடுகளும் நிறைவான பலன்களை பெறும்" என்றார்.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ், உலக பாரம்பரிய மருத்துவ மையத்தை இந்தியாவில் அமைக்க அதிக ஈடுபாடு காட்டினார். அவரது முயற்சியால் இன்று ஜாம்நகரில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பண்டைய காலம் முதல் பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியா சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் பங்களிப்பு, திறனுக்கு அங்கீகாரம் அளிக்கும் உலக பாரம்பரிய மருத்துவ மையம் ஜாம்நகரில் அமைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் சேவை செய்வதற்கான மிகப்பெரிய பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

உலகின் முதல் ஆயுர்வேத பல்கலைக்கழகம் ஜாம்நகரில் தொடங்கப்பட்டது. இந்த நகரில் ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் செயல்படுகிறது. இங்கு உலக பாரம்பரிய மருத்துவ மையத்தின் இடைக்கால அலுவலகம் செயல்படும்.

உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் கரோனா காலத்தில் நன்றாக உணரப்பட்டது. ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற இந்தியாவின் தொலைநோக்கு பார்வையை உலக சுகாதார அமைப்பு ஊக்குவிக்கிறது. ஒட்டுமொத்த மனித குலமும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற இலக்கை முன்னிறுத்தி இந்த மையம் செயல்படும்.

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறை, வாழ்வியல் அறிவியல் ஆகும். ஆயுர்வேதத்தில் சிகிச்சையைத் தவிர, சமூக ஆரோக்கியம், மனநலம், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x