Last Updated : 16 Apr, 2016 11:38 AM

 

Published : 16 Apr 2016 11:38 AM
Last Updated : 16 Apr 2016 11:38 AM

உ.பி.யில் ஓடும் ரயில் முன் செல்பி எடுக்க முயன்ற 2 பேர் பலி; சம்பவத்தைப் பார்த்த பயணி அதிர்ச்சி மரணம்

உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில்களின் முன்பாக 'செல்பி' எடுக்க முயன்ற சம்பவம் இரு உயிர்களை பலி கொண்டது. இதை நேரில் பார்த்த ஒரு பயணி அதிர்ச்சியால் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

உத்தரப் பிரதேசத்தின் முகல்சராய் மாவட்டத்துக்கு அருகில் உள்ள நகரம் சண்டவுலி. இந்த நகரத்தைச் சேர்ந்த ஜிதேந்தரா (18) மற்றும் வினோத்(20) ஆகிய இருவர் வெள்ளிக்கிழமை காலை அருகிலுள்ள மிர்சாபூரில் பர்சவுதா ரயில் கேட் அருகே ஓடும் ரயிலின் முன்பாக செல்பி எடுக்கச் சென்றனர். இங்குள்ள ரயில் தண்டவாளத்தின் மீது தங்கள் இருசக்கர வாகனத்துடன் செல்பி எடுக்க ரயிலுக்காக காத்திருந்தனர்.

அப்போது சிறிது நேரத்தில் அங்கு டெல்லி செல்லும் பிரம்மபுத்திரா மெயில் படுவேகமாக வந்தது. இதன் வேகத்தை சரியாகக் கணிக்காத இருவரும் அதன் முன்பாக மகிழ்ச்சியுடன் செல்பி எடுக்க முயன்றனர். இதற்குள் அவர்கள் இருவர் மீதும் ரயில் மோதிச் சென்றது. இதில் ஒருவர் நசுங்கியும், இன்னொருவர் ரயில் சக்கரங்களில் சிக்கியும் உயிரிழந்தனர்.

பிரம்மபுத்திரா மெயிலின் வாசல் கதவு வழியாக இந்தச் சம்பவத்தை பார்த்த ஒருவர் அதிர்ச்சியில் தடுமாறி ஓடும் ரயிலில் இருந்து விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுமார் 40 வயது மதிக்கத்தக்க இவருடன் சேர்த்து மற்ற இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு முன் தினம், இதே போன்ற மற்றொரு 'செல்பி' சம்பவத்தில் கார்த்திக் காகர் எனும் 10 ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக பலியானார்.

கடந்த சில வருடங்களாக செல்பேசிகளில் எடுக்கப்படும் ஆபத்தான 'செல்பி'களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து பல்வேறு எச்சரிக்கைக்கு பிறகும் 'செல்ஃபி' மரணங்கள் தொடர்வது பரிதாபமே. இதனால், அதன் மீது கூடுதலான விழிப்புணர்வு பிரச்சாரங்களின் தேவை அவசியமாகி விட்ட சூழல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x