Published : 19 Apr 2022 04:15 AM
Last Updated : 19 Apr 2022 04:15 AM
சென்னை: "இசையமைப்பாளர் இளைய ராஜாவை அவமதிப்பதா? "என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட புத்தகத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில், ‘‘அம்பேத்கர், பிரதமர் மோடி இருவருமே வறுமையையும், ஒடுக்கும் சமூக அமைப்பையும் அருகில் இருந்து பார்த்து அவற்றை உடைத்தெறிந்தவர்கள். இருவருமே இந்தியாவுக்காக பெரியகனவுகளைக் கண்டவர்கள். ஆனால், இருவருமே வெறுமனே சிந்திக்கிற வேலையை மட்டும் செய்தவர்கள் அல்லர். இருவருமே செயல்படுவதில் நம்பிக்கை கொண்ட எதார்த்தவாதிகள்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் இந்தக் கருத்துக்கு தமிழகத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை வெளியிட்டனர். இதை தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆதரவாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜகவினர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள், இளையராஜா மீது எதிரான கருத்துகளைக் கூறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தங்களுக்கு ஆதரவாகப் பேசவில்லை என்பதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவை அவமதிப்பது ஒரு சரியான அணுகுமுறை கிடையாது. இதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்,
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கொள்கைகள் மற்றும் பார்வைகள் இருக்கும். தாங்கள் விரும்புவதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவது எப்படி சரியான ஜனநாயகமாகும். கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜகவினர் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். இவ்வாறு கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT