கருப்புப் பண தகவல்களை அளிக்க 11 துறைகளுக்கு ‘எஸ்ஐடி’ கடிதம்

கருப்புப் பண தகவல்களை அளிக்க 11 துறைகளுக்கு ‘எஸ்ஐடி’ கடிதம்
Updated on
1 min read

கருப்புப் பணம் குறித்த தகவல் களை அளிக்கும்படி, 11 முக்கிய துறைகளுக்கு சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்ஐடி) கடிதம் அனுப்பி உள்ளது.

வெளிநாடுகளில் இந்தியர்கள் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. கருப்புப் பணத்தை மீட்க உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் எம்.பி.ஷா, அரிஜித் பசாயத் ஆகியோரை முறையே தலைவர் மற்றும் துணைத் தலைவர்களாக கொண்ட 13 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ, ரிசர்வ் வங்கி, வருமான வரித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இக்குழு கேட்கும் தகவல்களை தரும்படி, அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 11 முக்கிய துறைகளிடம் இருந்து சிறப்பு புலனாய்வுக்குழு தகவல்களை கோரியுள்ளது.

கருப்புப் பணம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள், துறைகளிடம் உள்ள ஆவணங்கள், விசாரணையின் தற்போதைய நிலை, விசாரணையில் குறுக்கீடுகள் இருந்ததா போன்ற விவரங்கள் கோரப்பட்டுள்ளன.

வரி ஏய்ப்பு, சுங்க, கலால் வரிகளை செலுத்தாமல் ஏமாற்றிய மோசடி விவரங்கள், பினாமி பெயர்களில் சொத்து குவிப்பு, ஊழல் மூலம் சொத்து சேர்த்தல், அந்நியச் செலாவணி மோசடி ஆகியவற்றின் மூலம் நாட்டில் கருப்புப் பணம் எப்படி உருவாகிறது, அந்தப் பணம் எப்படி வெளிநாடுகளுக்குச் செல்கிறது ஆகிய விவரங்களைத் திரட்டி அதை தடுக்க தேவையான பரிந்துரைகளையும் இக்குழு அளிக்க உள்ளது.

சிறப்பு புலனாய்வுக்குழு கோரியுள்ள தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகள் அனுப்பத் தொடங்கியுள்ளன. இவற்றை ஆராய்ந்து அடுத்தமாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் உறுப்பினர்கள் விவாதிக்க உள்ளனர்.

கருப்புப் பண மீட்பு விவகாரம் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகளை அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால், அதற்கான விசாரணை அறிக்கை விவரங்களையும் இக்குழு உச்சநீதிமன்றத்துக்கு அளிக்க உள்ளது.

ஸ்விட்சர்லாந்துக்கு கடிதம்

இதற்கிடையே, மத்திய நிதித்துறை அமைச்சகம் சார்பில் ஸ்விட்சர்லாந்து அரசுக்கு இந்தியர்களின் கருப்புப் பணம் குறித்த தகவல்களை தரும்படி கோரி புதிதாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு தரத் தயாராக இருப்பதாக அந்நாடு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

சர்வதேச ரகசிய தகவல்கள் பரிமாற்றம் தொடர்பாக இருநாடுகளிடையே உள்ள சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்தகவல் கோரப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in