

ராஜஸ்தான் மாநிலம் சித்ரகர் மாவட்டத்தில் தலித் இளைஞர்கள் மூவரை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் காமேசரா கூறும்போது, "ராஜஸ்தான் மாநிலம் சித்ரகர் மாவட்டம் லக்ஷ்மிபூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் நிர்வாணப்படுத்தி தாக்குதலுக்கு உள்ளாக்கபட்டனர்.
இவர்கள் மூவரும் காஞ்சார் என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள். மோட்டார் சைக்கிளை திருடியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கும்பல் ஒன்று இவர்களை தாக்கியிருக்கிறது.
தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்கள் மூவரும் 16, 17 வயது நிரம்பியவர்கள். கடந்த 2-ம் தேதி லக்ஷ்மிபூரில் காணாமல் போன மோட்டார்சைக்கிள் ஒன்று அந்த இளைஞர்களிடம் இருப்பது ஊர் மக்களுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த இளைஞர்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி தாக்கயுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்" என்றார்.
பாஸி போலீஸ் நிலைய தலைமை காவலர் கஜ் சிங் கூறும்போது, "தாக்கப்பட்ட இளைஞர்கள் மூவரும் ஏற்கெனவே திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பாக அவர்கள் மூவர் மீதும் ஏப்ரல் 2-ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.