Last Updated : 01 Apr, 2016 07:43 AM

 

Published : 01 Apr 2016 07:43 AM
Last Updated : 01 Apr 2016 07:43 AM

பிஹாரில் பகுதி அளவில் மதுவிலக்கு இன்று முதல் அமல்: சாராயம் காய்ச்சினால் மரண தண்டனை - பொது இடங்களில் மது அருந்தினால் 10 ஆண்டுகள் சிறை

பிஹாரில் பகுதி அளவிலான மதுவிலக்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதற்கான மசோதா சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் ஒருமனதாக நிறைவேறியது. இதில் கள்ளச் சாராயம் காய்ச்சுவோருக்கு மரண தண்டனை, பொது இடங்களில் மது அருந்தினால் 10 ஆண்டுகள் சிறை என தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

பிஹாரில் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்தார். இந்நிலையில் இதை அமல்படுத்தும் வகையில் ‘மதுவிலக்கு சட்ட மசோதா-2016’ மாநில சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் நிறைவேறியது. இதன்படி பிஹாரில் முதல் கட்டமாக ஏப்ரல் 1 (இன்று) முதல் உள்நாட்டு மதுபான விற்பனைக்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் வெளிநாட்டு மதுபான வகைகள் குறிப்பிட்ட இடங்களில் விற்பனைக்கு கிடைக்கும். இவை அரசு மதுபானக் கடைகளில் மட்டும் கிடைக்கும். இதுவும் வரும் காலங்களில் தடை செய்யப்பட்டு பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும்.

‘மது அருந்த மாட்டோம்’

சட்டப்பேரவையில் மது விலக்கு மசோதா மீதான விவாதத்தில் பாஜக உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட இது வழிவகுக்கும் என அவர்கள் குற்றம் சாட்டினர். மற்ற அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி ஆரவாரம் செய்து மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து பாஜக உறுப்பினர்கள் அமைதி யாகிவிட்டனர்.

இத்துடன் பிஹாரின் ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் அனை வரும் ‘மது அருந்த மாட்டோம்’ என தீர்மானம் நிறைவேற்றினர். சபாநாயகர் விஜய்குமார் சவுத்ரி இது தொடர்பாக உறுதிமொழி வாசிக்க அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று அதை ஏற்றுக்கொண்டனர்.

மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் நிதிஷ்குமார் பேசும்போது, “இந்திய அரசியல் சட்டத்தின் 47-வது பிரிவின்படி மதுவிலக்கை அமல்படுத்துவது மாநில அரசுகளின் கடமையாகும். மதுவால் அதிகம் பாதிக்கப்படும் ஏழைக் குடும்பங்களை காப்பது நமது அரசின் தலையாய கடமை. பிஹாரில் மது அருந்தி பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு அரசு நிவாரண நிதி அளிக்க மதுவிலக்கு சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.

மறுவாழ்வு மையங்கள்

நிரந்தர உடல் பாதிப்பு அடை வோருக்கும் உதவித்தொகை அளிப்பதுடன், போதைப் பழக்கத் தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையங்களும் அமைக் கப்படும். இதற்காகஅரசு மருத்து வர்களுக்கு பெங்களூருவில் உள்ள ‘நிம்ஹான்ஸ்’ மருத்துவமனையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் மது அருந்த மாட்டோம், மற்றவர்களை அருந்த விடவும் மாட்டோம்” என்றார்.

பிஹாரில் மதுவிலக்கு சட்டப்படி, கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கு அதிகபட்சம் மரண தண்டனை விதிக்கப்படும். பொது இடங்களில் மது அருந்துவோருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரையும், வீட்டில் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு தொந்தரவு அளிப்போருக்கு 5 ஆண்டுகள் வரையும் சிறை தண்டனை விதிக்கப்படும். மது கடத்தலில் ஈடுபடும் பெண்கள், சிறுவர்களுக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை உண்டு. மருத்துவ பயன்பாட்டுக்கு என்ற பெயரில் மது விற்பனை செய்வோருக்கு 7 ஆண்டுகள் வரை விதிக்கப்பட உள்ளது. இதனால் ஹோமியோபதி மருந்து தயாரிப்பாளர்களுக்கு 100 மி.லி. மட்டும் மதுவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. மது விலக்கு கட்டுப்பாடுகளை தீவிர மாகக் கண்காணிக்க கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப் படும் எனவும் இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இத்துடன் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x