

மேற்குவங்கம்: சுந்தரவனக்காட்டில் விடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட புலி ஒன்று படகிலிருந்து குதித்து தண்ணீரில் நீந்தியபடி காட்டிற்குள் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
புலிகள் வேட்டையாடுவது அல்லது தங்களின் வாழ்விடங்களில் அமையாக ஓய்வெடுப்பது போன்ற வீடியோக்கள் எப்போதுமே பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தி அவர்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய ஒன்று. ஆனால் இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் உள்ள புலியின் செயல் நம்ப முடியாததாகவும் பார்ப்பவர்களை வாய்பிளக்க வைப்பதாகவும் இருக்கிறது.
இந்திய வனப்பணி அதிகாரியான பர்வீன் கல்வான் தனது ட்விட்டர் பக்கத்தில், மேற்குவங்க மாநிலத்தின் சுந்தரவனக்காட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். பழைய வீடியோவான அது மீண்டும் வெளியாகி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது.
அந்த வீடியோவில், மீட்கப்பட்டு சுந்தரவனக்காட்டில் விடுவதற்காக அழைத்துச் செல்லப்படும் புலி ஒன்று படகில் இருந்து தண்ணீருக்குள் குதித்து நீந்தியபடி குதூகலத்துடன் காட்டிற்குள் செல்கிறது. புலி தண்ணீரில் குதித்து நீந்தும் அந்த அற்புதக் காட்சியை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.
புலியை மீட்டு காட்டில் விடும் இந்த வீடியோ காட்சி, 71 ஆயிரத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது. ரிச்சர்ட் பார்க்கர் என்ற அந்த புலி படகிலிருந்து குதித்து திரும்பிக்கூட பார்க்காமல் தண்ணீரில் குதித்தோடும் காட்சி, லைஃப் ஆஃப் பை படத்தின் அழகிய காட்சியை நினைவூட்டுவதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.