

'கேரளத்தின் பிஹார்' என கண்ணூர் மாவட்டத்தை அழைப்பதுண்டு. வடக்கு கேரளமான கண்ணூர், சித்தாந்த கொலைகளுக்கு பெயர்போனது. கம்யூனிஸ்ட் - காங்கிரஸ், கம்யூனிஸ்ட் - பாஜக, ஆர்எஸ்எஸ் இடையிலான அரசியல் படுகொலைகளால் இந்திய அரசியல் படுகொலைகளின் தலைநகரமாக கண்ணூர் திகழ்கிறது. இந்த கண்ணூர் கலாசாரம் இப்போது கேரளத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேரூன்றி, கடவுளின் தேசம் இப்போது ரத்தக்கறைப் படிந்த கொலைகளின் தேசமாக மாறியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆலப்புழா மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் பரவியுள்ள பழிக்குப் பழி கொலைகளின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரட்டை படுகொலைகள் நடந்துள்ளன. நேற்றுமுன்தினம் பாலக்காடு மாவட்டம் எலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த எஸ்டிபிஐ தொண்டரான சுபைர், மசூதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது இரண்டு கார்களில் வந்த ஒரு சிலரால் வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை நடந்த 24 மணி நேரத்துக்குள்ளாகவே பாலக்காடு நகரில் உள்ள மேலமூரியில் நேற்று மதியம் ஒரு மணியளவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் சீனிவாசன் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சுபைர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட சமயத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகரின் கொலை நடந்துள்ளது. 24 மணி நேரத்தில், பாலக்காடு மாவட்டத்தின் ஒரே பகுதிகளில் நடந்த இரு வேறு படுகொலை சம்பவங்களால் கேரளாவில் பதற்றம் நிலவுகிறது. வன்முறை சம்பவங்களை கருத்தில் கொண்டு பாலக்காடு மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 300 பேர் கொண்ட பட்டாலியன் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி எலப்பள்ளி கிராமத்தைச் சார்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் சஞ்சித் என்பவர், பட்டப்பகலில் அவரது மனைவி கண்முன்னே படுகொலை செய்யப்பட்டார். தனது மனைவியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, காரில் வந்து இடைமறித்த 4 பேர் கும்பல் அவரை படுகொலை செய்தனர். சஞ்சித் படுகொலை சம்பவத்துக்கு பின் பாலக்காடு மற்றும் ஆலப்புழா மாவட்டங்கள் ரத்தக்களரியாக மாறியுள்ளன.
டிசம்பர் 18ம் தேதி ஆலப்புழா, மண்ணஞ்சேரியைச் சேர்ந்த எஸ்டிபிஐ (SDPI) மாநிலச் செயலாளர் கேஎஸ் ஷான் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு மறுநாள் அதிகாலை 6 மணியளவில் ஆலப்புழா வெள்ளக்கிணற்றைச் சேர்ந்த பாஜக மாநிலக் குழு உறுப்பினர் ரஞ்சித் சீனிவாசன் என்பவரும் கொலை செய்யப்பட்டார். 12 மணிநேரத்தில் பழிக்கு பழி கொலை நடைபெற்றது.
முன்னதாக, டிசம்பர் 2ல் பத்தனம்திட்டாவின் பிரிங்கரா பகுதியைச் சேர்ந்த, சிபிஎம் கமிட்டி செயலாளர் சந்தீப் குமார் என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஆலப்புழாவில் பத்தாம் வகுப்பே படித்துவந்த சிபிஎம் மாணவர் அமைப்பின் உறுப்பினர் அபிமன்யூ கொலைசெய்யப்பட்டது கொடூரத்தின் உச்சமாக அமைந்தது. இப்படியாக கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் ஐந்து உயிர்கள் சித்தாந்த படுகொலைகளால் பறிபோயுள்ளது.
பழிக்கு பழி என்பது கொலையில் மட்டுமல்ல, கொலை செய்யும் பாணியிலும் தொடர்வதுதான் சோகம். நவம்பர் 15ல் ஆர்எஸ்எஸ் தொண்டர் சஞ்சித் தனது மனைவி முன் படுகொலை செய்யப்பட்டாரோ, அதேபோல் நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 15ல்) கொலை செய்யப்பட்ட எஸ்டிபிஐ தொண்டரான சுபைர் தனது தந்தைக்கு முன் கொலையானார். எஸ்டிபிஐ ஷான் 42 முறை கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக சிதையுண்டார். அதே பாணியில் 12 மணிநேரத்தில் இதற்கு பழியாக பாஜக ரஞ்சித் சீனிவாசன் தனது மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன் சிதைக்கப்பட்டார்.
இதுபோன்ற சித்தாந்த கொலைகள் அரசியல் கட்சிகளுக்கு லாபத்தை கொடுத்தாலும், இங்கே நிர்கதியாய் நிற்பது கொலையுண்ட நபர்களின் குடும்பங்களே. ஆலப்புழாவில் கொலை செய்யப்பட்ட எஸ்டிபிஐ ஷான் மற்றும் பாஜக ரஞ்சித் சீனிவாசன் இருவருக்குமே தலா இரண்டு குழந்தைகள். சில ஆண்டுகள் முன்பே திருமணம் முடித்து இல்லற வாழ்க்கையை இரு குடும்பங்களும் துவங்கின. ஆனால் இப்போது இரண்டுபேரின் குடும்பங்களுமே ஆதரவற்ற நிலையில் உள்ளன.
குறைந்தபட்சம் மாதத்திற்கு ஓர் அரசியல் படுகொலையாவது நடப்பது வாடிக்கையாகிவிட்டது. அரசியல் கொலைகளுக்கு பெயர்பெற்ற கண்ணூர், கரோனா பெருந்தொற்று ஏற்பட்ட இரண்டு ஆண்டுகள் சமயத்தில் கொஞ்சம் அடங்கியிருந்தது. அந்த சமயத்தில் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன், அங்கு அரசியல் கொலைகளை கட்டுக்குள் கொண்டுவர உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார். இதனால் கண்ணூரில் அரசியல் மோதல்கள் வெகுவாக குறைந்தன. அரசியல் கொலைகள் கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு இல்லை.
கண்ணூர் அமைதியாக இருந்தாலும், இப்போது வன்முறை தெற்கு மற்றும் மத்திய கேரளத்தை சூழ்ந்துள்ளது. பினராயி விஜயன் அரசு மே மாதம் பதவிக்கு வந்ததில் இருந்து இதுவரை 27 அரசியல் கொலைகள் தெற்கு மற்றும் மத்திய கேரளத்தில் பதிவாகியுள்ளன. ஒருமுறை கொலை நடந்ததால், அதற்கு பழிக்கு பழியாக அடுத்த சில மணிநேரங்களிலேயே இன்னொரு கொலை நடந்துவிடுகிறது.
காவல்துறையும், மாநில உளவுத்துறையும் சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இவற்றில் பல கொலைகளை தடுத்திருக்க முடியும் என்கிறார் கேரள முன்னாள் டிஜிபி ஒருவர். ''ஒவ்வொரு முறையும் அரசியல் கொலைகள் நடக்கும்போது காவல்துறை முன்னெச்சரிக்கைகளை எடுக்க தவறுகின்றன. கொலையாளிகள் தங்கள் திட்டங்களை மிகத்துல்லியமாக திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள். ஆனால், இந்த திட்டமிடல் காவல்துறையிடமோ, உளவுத்துறையிடமோ குற்றங்களை தடுப்பதில் இல்லை" என்று ஆங்கில ஊடகத்துக்கு அந்த முன்னாள் டிஜிபி பேசியுள்ளார்.
அவர் சொன்னதுபோலவே காவல்துறையின் அலட்சியம் அரசியல் கொலைகளில் மிகப்பெரிய தோல்வியை பறைசாற்றுகிறது. டிசம்பர் 18ல் நடந்த கொலை மாநிலத்தை உலுக்கிய சம்பவங்களில் ஒன்றாக மாறியது. இந்த சம்பவம் நடந்த சமயத்தில் ஆலப்புழா காவல்துறை சார்பில் அதிகாரிகள் மட்ட கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. அதேநாளில் பணியில் இருந்த மற்றொரு போலீஸ் அதிகாரி நீரில் மூழ்கி இறக்க நேரிட காவல்துறை கண்காணிப்பு என்பது நகரத்தில் வெகுவாக குறைந்தது இருந்தது. இந்த சமயத்தை பயன்படுத்தி இரட்டை கொலைகள் 12 மணிநேரத்தில் நடந்தேறின.
ஒரு இடத்தில் கொலை நடந்துவிட்டால், உடனடியாக அந்த மாவட்டங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. சில நாட்களில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் மீண்டும் கொலைகள் அரங்கேறுகின்றன. கேரள முதல்வர் பினராயி விஜயனுமே இதுபோன்ற கொலை குற்றச்சாட்டில் இருந்து மீண்டு வந்தவர் தான். 1969ல் கண்ணூர் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராமகிருஷ்ணன் அரசியல் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சில வருடங்கள் முன்புதான் அதிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல தசாப்தங்களாக நடந்துவரும் இதுபோன்ற சித்தாந்தப் படுகொலைகளால் 'கடவுளின் தேசமான' கேரளா 'கொலைகளின் தேசமாக' மாறிவருகிறது. இதுமேலும் தொடராமல் இருக்க, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் முதல்வர் பினராயி விஜயன் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது காலத்தின் அவசியம்.