Published : 17 Apr 2022 05:09 AM
Last Updated : 17 Apr 2022 05:09 AM

'பிரதமரின் மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது' - 13 எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்குவங்க முதல்வர் (திரிணமூல் காங்கிரஸ்) மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் (திமுக) ஸ்டாலின், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, ஜார்க்கண்ட் முதல்வர் (ஜேஎம்எம்) ஹேமந்த் சோரன், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் தேபபத்ரா பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் தலைவர் மனோஜ் பட்டாச்சார்யா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் குன்னாலிகுட்டி, கம்யூனிஸ்ட் (எம்எல்) விடுதலை கட்சியின் பொதுச் செயலாளர் திபேந்தர் பட்டாச்சார்யா ஆகியோர் நேற்று வெளியிட்ட கூட்டடறிக்கையில் கூறியிருப்பதாவது:

உணவு, உடை, நம்பிக்கை, திருவிழா, மொழி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவது கவலை அளிக்கிறது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவது, மத ஊர்வலங்களில் கலவரத்தை ஏற்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதிகார வர்க்கத்தின் ஆசியுடன் சமூக வலைதளங்கள் மூலம் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது. ஆயுதமேந்திய கலவர கும்பல்கள் அதிகாரவர்க்கத்தின் ஆசியுடன் செயல்படுவதை பிரதமர் மோடியின் மவுனம் உறுதி செய்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x