Published : 16 Apr 2022 09:38 AM
Last Updated : 16 Apr 2022 09:38 AM

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 975: டெல்லியில் அதிகரிக்கும் தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 975 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் 4 பேர் உயிரிழந்தனர். 796 பேர் குணமடைந்தனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 975 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்படோர் எண்ணிக்கை 4,30,40,949 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் தொற்றால் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,21,742 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 11,191 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 810 பேர் சிகிச்சையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை நாடு முழுவதும் கரோனாவிலிருந்து 4,25,07,038 பேர் குணமடைந்தனர்.
அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 0.26% ஆக உள்ளது. வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 0.25% என்றளவில் உள்ளது. (பாசிடிவிட்டி விகிதம் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்ற விவரம்)

இதுவரை 186.38 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

தலைநகர் டெல்லியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதுவும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் தொற்று பரவுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சேகரிக்கப்படும் கரோனா மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒருவேளை சீனாவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கரோனா ஒமிக்ரான் வைரஸின் திரிபான XE வைரஸ் இருக்கிறதா என்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிக் குழந்தைகள் மத்தியில் தொற்று ஏற்பட்டாலும்கூட இப்போதைக்கு பள்ளிகளை மூட வேண்டிய அவசியமில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் அடுத்தக்கட்ட கரோனா அலை ஏற்படலாம் என்ற சில ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், அன்றாட தொற்று அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.

இதற்கிடையில், கரோனா தொற்று அதிகரிக்கும் டெல்லி, கேரளா, ஹரியாணா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கரோனா பரிசோதனைகள், நுண்ணளவில் கட்டுப்பாட்டு பகுதிகள், தடுப்பூசி செலுத்துதல், தொற்று தொடர்பு கண்டறிதல் ஆகியவற்றில் சுணக்கம் காட்டாமல் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x