Published : 16 Apr 2022 06:42 AM
Last Updated : 16 Apr 2022 06:42 AM
அலகாபாத்: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதான 2 இளம்பெண்கள் ஒரே கல்லூரியில் பயின்று வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். ஆனால், இரு பெண்கள் திருமணம் செய்வதை இந்த சமூகமும், தங்கள் பெற்றோரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என உணர்ந்த அவர்கள், வேறு ஊருக்கு சென்று ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதையடுத்து இந்த விஷயம் அந்தப் பெண்களின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களில் ஒரு பெண்ணின் தாயார் அஞ்சுதேவி என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை (ஹேபியஸ் கார்ப்பஸ்) தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 2 பெண்களையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. அவர்கள் இருவரும் கடந்த 7-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது அந்த பெண்கள் கூறும்போது, “இந்து திருமணச் சட்டமானது 2 பேரின் திருமணத்தைத்தான் குறிக்கிறதே தவிர, அவர்கள் கட்டாயம் ஒரு ஆண் - ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் எனக் கூறவில்லை. அதேபோல, தன் பாலின திருமணத்துக்கு அந்த சட்டம் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எனவே, மனம் ஒத்து நாங்கள் செய்துகொண்ட திருமணத்தை நீதிமன்றம் அங்கீகரிக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
இதற்கு உ.பி. மாநில அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 2 பெண்களான மனுதாரர்கள் செய்து கொண்ட திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று உத்தரவு பிறப்பித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT