

உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து உக்ரைனில் உள்ள மற்ற இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
விகாஸ் ஸ்வரூப், "உக்ரைனில் இந்திய மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். உக்ரைனைச் சேர்ந்த மூன்று பேர் இந்த கொலையை செய்துள்ளனர். இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது" எனக் கூறியுள்ளார்.
இருவரும் உ.பி.யைச் சேர்ந்தவர்கள்:
கொலையான மாணவர்களின் அடையாளம் தெரியவந்துள்ளது. ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த பிரனவ் சைந்தல்யா மற்றொருவர் காசியாபாத்தைச் சேர்ந்த அன்கூர் சிங் எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்த ஆக்ராவைச் சேர்ந்த இந்தர்ஜித் சிங் சவுகான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மூவர் கைது:
இந்திய மருத்துவ மாணவர்கள் இருவரை கொலை செய்தது தொடர்பாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர். எல்லையை கடந்து வேறு நாட்டுக்கு தப்பவிருந்த அவர்களை கைது செய்த போலீஸார் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும் முடக்கியுள்ளனர்.
தூதரகம் மூலம் நடவடிக்கை:
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட இந்திய மாணவர்கள் இருவரின் சடலத்தையும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், உக்ரைன் தலைநகர் கியவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் மாணவர்கள் பயின்று வந்த பல்கலைக்கழகம், போலீஸார் மற்றும் சம்பவம் நடந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம் இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் திரட்டி வருவதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.