

நாட்டின் நிதி நிலைமைப் பாதாளத்திற்குச் சென்று விட்டது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, அதனை ஒழுங்குபடுத்த சில கண்டிப்பான நடவடிக்கைகள் தேவைப்படுகிறது என்று கூறினார்.
"அடுத்த 2 ஆண்டுகளில் சில கடினமாக முடிவுகளை எடுத்து, நாட்டின் நிதி நிலைமையை ஒழுங்கு படுத்துவது அவசியம், இதுவே நாட்டின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும்” என்று அவர் பனாஜியில் பாஜக தொண்டர்களிடத்தில் தெரிவித்தார்.
முந்தைய அரசு எதையும் விட்டுச் செல்லாத நிலையில் நான் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளேன். அவர்கள் அனைத்தையும் காலி செய்துவிட்டனர். நாட்டின் நிதிநிலைமை அதல பாதாளத்தைத் தொட்டுவிட்டது.
இதற்கு நான் எடுக்கும் நடவடிக்கைகள் இந்த நாடு எனக்கு அளித்துள்ள அளவற்ற நேசத்திற்கு புறம்பாகக் கூட போகலாம். ஆனால் அந்த நடவடிக்கைகள் நாட்டின் நிதி நிலைமைகளைச் சரி செய்து மீட்கவே என்று அவர்கள் உணரும்போது நான் அவர்கள் நேசத்தைத் திரும்ப பெறுவேன்.
இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில் நிச்சயம் நாட்டின் நிதி நிலைமைகளில் வளர்ச்சி ஏற்படாது.
பாஜக-வைப் புகழ்தால், மோடியின் புகழ் பாடுதல் மூலம் நாம் நாட்டிற்கு ஒன்றும் செய்ய முடியாது. மோடியைப் புகழ்வது சூழ்நிலையை மேம்பாடு அடையச் செய்யாது. கடினமான சில நடவடிக்கைகள் எடுத்தால்தான் நிதி நிலைமை வளர்ச்சியடையும்.
இவ்வாறு கூறினார் பிரதமர் மோடி.