

சீனாவால் தேடப்படும் குற்றவாளி என்று குற்றம்சாட்டப்பட்ட சர்வதேச உய்குர் - சீன கூட்டமைப்புத் தலைவர் டோல்குன் இசாவுக்கு வழங்கப்பட்ட விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரம் உறுதி செய்துள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள், "இந்தியாவில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதாகக் கூறி உய்குர் தலைவர் டோல்குன் இசா எலக்ட்ரானிக் டூரிஸ்ட் விசா முறை மூலம் விண்ணப்பித்திருக்கிறார். அவரது விசா விண்ணப்பத்துக்கான காரணம் ஏற்புடையதல்ல. அதன் காரணமாக அவர் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், முறையான காரணங்களுடன் விசா கோரி விண்ணப்பித்தால் அவருக்கு மீண்டும் விசா வழங்கப்படும்" என்றனர்.
தர்மசாலாவில் அடுத்த வாரம் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனியில் உள்ள டோல்குன் இசா, தனக்கு விசா வழங்கக் கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு ஏப்ரல் 6-ல் விசா வழங்கப்பட்டது பின்னர் ஏப்.23-ல் விசா ரத்து செய்யப்பட்டது.
முன்னதாக உய்குர் தலைவர் இசா தனக்கு இந்திய விசா மறுக்கப்பட்டுள்ளது குறித்து 'தி இந்து' ஆங்கிலம் நாளிதழிடம் தொலைபேசி வாயிலாக பெர்லினில் இருந்து பேசும்போது, "நான் இந்தியா செல்ல வேண்டும் என மிகவும் விரும்பினேன். ஆனால், சனிக்கிழமை எனக்கு வந்த மின்னஞ்சலில் ஏப்ரல் 6-ம் தேதி எனக்கு வழங்கப்பட்ட இந்திய விசா ரத்து செய்யப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்திய அதிகாரிகள் யாரும் என்னை தொடர்புகொண்டு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. இது மிகுந்த வருத்தமளிக்கிறது" என்றார்.
சீனா எதிர்ப்பு:
இசாவுக்கு இந்தியா விசா வழங்கப்பட்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளவர் டோல்குன் இசா. அவரை சீனாவிடம் ஒப்படைக்க வேண்டியது சம்பந்தப்பட்ட நாட்டின் பொறுப்பு என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டோல்குன்னை எதிர்ப்பது ஏன்?
சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சீனாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட உய்குர் மக்களை டோல்குன் இசா தூண்டிவிடுவதாக சீனா குற்றம்சாட்டி வருகிறது. இதன் காரணமாகவே டோல்குன் இசாவை சீனா கடுமையாக எதிர்க்கிறது.