Published : 15 Apr 2022 05:59 AM
Last Updated : 15 Apr 2022 05:59 AM

முன்னாள் பிரதமர்கள் அருங்காட்சியகம் தொடக்கம் - பார்வையிடுவதற்கு முதல் டிக்கெட் வாங்கினார் பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆற்றிய பணிகளை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வசதியாக, பிரதமர்களின் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதையொட்டி ஓராண்டுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.

அம்பேத்கர் பிறந்த நாளில்

இதன் ஒருபகுதியாக முன்னாள் பிரதமர்களின் அருங்காட்சியகம் டெல்லியில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். லோக் கல்யாண் மார்க் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகில் இது அமைந்துள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமராக பதவி வகித்த அனைத்து கட்சிகளைச் சேர்ந்த 14 பேரின் பங்களிப்பை எடுத்துரைப்பதாக இந்த அருங்காட்சியகம் இருக்கும் என பிரதமர் அலுவலகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. குறிப்பாக, பல்வேறு சவால்களை முறியடித்து, நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் அளித்த பங்களிப்பை பறைசாற்றுவதாக இது இருக்கும். சுதந்திரப் போராட்டம் முதல் நாட்டின் வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றிருக்கும்.

அருங்காட்சியகத்தை தொடங்கிவைத்த பிறகு பிரதமர் மோடி கூறும்போது, “இந்த அருங்காட்சியகம் வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும். நாட்டின் முன்னேற்றத்துக்கு ஒவ்வொரு பிரதமரும் பங்காற்றி உள்ளனர். இதற்காக அவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டுள்ளனர். இதுபற்றி இளைஞர்கள் தெரிந்துகொள்ள இந்த அருங்காட்சியகம் உதவும்” என்றார்.

மாணவர்களுக்கு சலுகை

அருங்காட்சியகத்தை தொடங்கி வைப்பதற்கு முன்னதாக, இந்த அருங்காட்சியகத்துக்கு செல்வதற்கான முதல் டிக்கெட்டை பிரதமர் வாங்கினார். இணையவழியில் வாங்கினால் ரூ.100, நேரில் வாங்கினால் ரூ.110 என நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கான கட்டணம் ரூ.750 ஆகும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் இணையவழியில் டிக்கெட் வாங்கினால் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டிடம்

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அருங்காட்சியகம் தீன் மூர்த்தி பவனில் (பிளாக் 1) செயல்பட்டு வந்தது. இதே வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடமும் (பிளாக் 2) இணைக்கப்பட்டு இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இது மொத்தம் 15,600 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

இந்த கட்டிடம் கட்டுவதற்காக அப்பகுதியில் இருந்த மரங்கள் எதுவும் வெட்டப்படவில்லை. நாட்டு மக்களின் கைகள் தர்ம சக்கரத்தை பிடித்திருப்பது போல இந்த அருங்காட்சியகத்தின் இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நவீன வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x