

மேற்குவங்க மாநிலத்தில் ஒரு கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மாவட்ட நீதிமன்றம் 8 பேருக்கு மரண தண்டனையும் மற்றொரு குற்ற வாளிக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பமுங்கச்சியைச் சேர்ந்த சவுரவ் சவுத்ரி, கல்லூரியில் படித்து வந்தார். அத்துடன் அப்பகுதியில் நடைபெற்ற சமூக விரோத செயல்களை எதிர்த்துப் போராடி வந்தார்.
இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி சவுத்ரி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இவரது சடலம் அப்பகுதியில் உள்ள ரயில் பாதைக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டது.
இந்தக் கொலை சம்பவம் குறித்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மொத்தம் 13 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், கடந்த 15-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் 12 பேர் குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம் ஒருவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி விடுதலை செய்தது.
இந்நிலையில் குற்றவாளி களுக்கான தண்டனை விவரத்தை 7-வது கூடுதல் மாவட்ட நீதிபதி தமன் பிரசாத் பிஸ்வாஸ் நேற்று அறிவித்தார். இதன்படி, 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஷ்யாமல் கர்மாகர், சுமன் சர்கார், சுமன் தாஸ், அமல் பரூய், சோம்நாத் சர்தார், தபஸ் பிஸ்வாஸ், ரத்தன் சமதார், தரக் தாஸ் ஆகியோர் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
இதுதவிர, ராகேஷ் பர்மனுக்கு ஆயுள் தண்டனையும், பாலி மைதி, சிசிர் முகர்ஜி, ரத்தன் தாஸ் ஆகிய மூவருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.