Published : 14 Apr 2022 07:18 AM
Last Updated : 14 Apr 2022 07:18 AM
புதுடெல்லி: ராம நவமி கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாட்டின் பல மாநிலங்களில் வன்முறை நடந்தன. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லோகர்தகா பகுதியில் கடந்த 10ம் தேதி நடந்த ராம நவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் இறந்தார், 12 பேர் காயம் அடைந்தனர்.
இதேபோல் மத்தியப் பிரதேசம் கர்கான் பகுதியில் ராம நவமி ஊர்வலத்தின் போது நடந்த கல்வீச்சு சம்பவம் தொடர்பாக 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை மன்குர்த் பகுதியில், ராம நவமி ஊர்வலத்தில் நடந்த வன்முறையில் பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப் பட்டனர். பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் ராம நவமி கொண்டாட்டம் அமைதியான முறையில் நடந்ததாக, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ராம நவமி சமீபத்தில் கொண்டாடப்பட்டது. 25 கோடி மக்கள்தொகை உள்ள உத்தர பிரதேசத்தில், 800 ராம நவமி ஊர்வலங்கள் நடந்தன. அதே நேரத்தில் புனிதமான ரம்ஜான் மாத நோன்பும் மேற் கொள்ளப்படுகிறது.
ராம நவமி கொண்டாட்டத்தில், வன்முறைக்கு இடமில்லை என்பதை உத்தர பிரதேசம் நிருபித்துள்ளது. சண்டை சச்சரவுகள் கூட நடக்கவில்லை. இது வளர்ச்சியடைந்த உத்தர பிரதேசத்தின் புதிய சிந்தனையை காட்டுகிறது. இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT