80 கோடி இளைஞர்களின் ஆற்றலை பயன்படுத்தி 21-ம் நூற்றாண்டை இந்தியா வழிநடத்தும்: பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

80 கோடி இளைஞர்களின் ஆற்றலை பயன்படுத்தி 21-ம் நூற்றாண்டை இந்தியா வழிநடத்தும்: பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
Updated on
2 min read

சுமார் 80 கோடி இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி 21-ம் நூற்றாண்டை இந்தியா வழிநடத் தும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி பல்கலைக் கழகத்தில் 5-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது:

இந்த 21-ம் நூற்றாண்டை இந்தியா வழிநடத்தும். ஏனெனில், இந்த நூற்றாண்டுக்கு தேவையான ஆற்றலாகக் கருதப்படும் அறிவு, இந்தியாவில் அதிக அளவில் உள்ளது. அதாவது 35 வயதுக்குட்பட்ட, 80 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களின் சக்தி இந்தியாவில்தான் உள்ளது. ஒவ்வொரு இளைஞரின் கனவும் இந்த நாட்டின் வெற்றிக் கதையாக இடம்பெறும் என்று நம்பலாம்.

கல்லூரி படிப்பை முடித்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி உங்களின் (மாணவர்கள்) மனதில் எழும். ஆனால், நம் முன்னால் என்னென்ன வாய்ப்பு இருக்கிறது என்பதை நன்கு அறிந்தவர்களுக்கு மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

உங்களுடைய பெற்றோர் உங்களுக்கு என்ன செய்தார்கள் என்று நினைவுகூருங்கள். உங்களுக்காக அவர்கள் தங்கள் சந்தோஷத்தை தியாகம் செய்திருக்கிறார்கள். சிறு வயதில் உங்களுக்கு ஏராளமான எண்ணங்கள் தோன்றியிருக்கும். ஆனால், அதை செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாம். அதை மறந்துவிடுங்கள். மாறாக, என்ன சாதித்தோம் என்று சிந்தனை செய்யுங்கள்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு சுற்றுலா வந்த ஏழை பக்தர்களின் பங்களிப்பில் இந்த பல்கலைக்கழகம் உருவா னது. எனவே, ஏழைகளுக்காக உங்களால் முடிந்ததை செய் யுங்கள்.

நம் நாடு வளர்ச்சிப் பாதையில் புதிய உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. இளைஞர்களின் சக்தி அதிகரித்து வரும் நிலையில் மேலும் பல சாதனைகளை நம்மால் செய்ய முடியும். எதையாவது செய்ய வேண்டும் என்று கனவு காணுங்கள். மற்றவர்களைப் போல ஆக வேண்டும் என்று எண்ணாதீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் மாநில ஆளுநர் என்.என்.வோரா, முதல்வர் மெகபூபா முப்தி, மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காஷ்மீர் இதயத்தில் ரணம்

ஜம்முவிலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள கத்ராவில் ஸ்ரீ வைஷ்ணவ தேவி நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை நேற்று திறந்து வைக்கப் பட்டது. பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மெகபூபா பேசும்போது, “பாகிஸ் தான், சிரியா, லிபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் அமைதி யின்மை நிலவுகிறது. ஒரே மதத்தைச் சேர்ந்த சன்னி, ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களிடையே மோதல் நிலவி வருகிறது. இந்நிலை யில், பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழும் இந்தியாவில் வசிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆனால், காஷ்மீரின் இதயத்தில் ரணம் உள்ளது. நாம் அனைவரும் இணைந்து இந்த ரணத்தை உடனடியாக சரி செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான், நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர்களைப் போல இங்குள்ள இளைஞர்களும் வளமாக வாழவும் நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்கவும் முடியும்” என்றார்.

ஹந்த்வாராவில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் சம்பவங்களை மனதில் வைத்து மெகபூபா இவ்வாறு பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in