Published : 03 Jun 2014 08:26 AM
Last Updated : 03 Jun 2014 08:26 AM

அருவங்காடு வெடிமருந்து ஆலையில் விபத்து: படுகாயம் அடைந்த 7 தொழிலாளர்களில் 2 பேர் கவலைக்கிடம்

உதகை அருகே அருவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அருவங்காடு பகுதியில் மத்திய பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் வெடிமருந்து (கார்டைட்) தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் போர் ஆயுதங்களுக்கான வெடி மருந்து தயாரிக்கப்படுகிறது.

திங்கள்கிழமை பகல் 12 மணியளவில் தொழிற்சாலையின் ஜி.சி. (கன் காட்டன்) பிரிவில் திடீரென பயங்கர வெடி விபத்தில் அந்த பிரிவின் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.

வெடி சத்தம் கேட்டவுடன் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் அப்பகுதிக்குச் சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு தொழிற்சாலை மருத்துவமனையில் முதலுதவிக்கு சேர்த்தனர். பின்னர், வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால், தொழிற்சாலையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

தொழிற்சாலையின் ஜி.சி. பிரிவில் கடந்த 4 நாட்களாக பராமரிப்புப் பணிகள் நடந்து வந்துள்ளன. பராமரிப்புப் பணியை அங்கீத் இன்ஜினீயரிங் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

இதில் மாதூர் யாதவ்(40), கமலேஷ் யாதவ், ஜெயராம் சிங், மனோஜ் சுத்தார் ஆகிய நான்கு ஒப்பந்தப் பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர் களுக்குப் பாதுகாப்புக்காக பயர்மேன் ராஜ்ரஹீக், சார்ஜ் மென்கள் சந்திரிகா பிரசாத் மற்றும் தேவராஜ் பணியாற்றி வந்தனர். அங்குள்ள குழாயை வெல்டிங் செய்தபோது வெடி விபத்து ஏற்பட்டதில் அனைவரும் படுகாயமடைந்தனர்.

தொழிற்சாலை துணை பொது மேலாளர் (நிர்வாகம்) நரேந்திரா கூறுகையில், ஜி.சி. பிரிவில் ஏற்பட்ட வெடி விபத்தின்போது அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் 7 பேர் காயமடைந்தனர். அதில், மாதுர் யாதவின் கையில் அடிப்பட்டு அவர் கோவை கங்கா மருத்துவமனைக்கும், கண்ணில் காயம் ஏற்பட்ட ராஜ்ரஹீக் கோவை கே.ஜி., மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டனர். ஜெயராம் சிங்கிற்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. கமலேஷ் யாதவ், மனோஜ் சுத்தார், சந்திரகா பிரசாத், தேவராஜ் ஆகியோர் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொழிலாளர்கள் ஜி.சி. பிரிவில் குழாயை வெல்டிங் செய்துகொண்டிக்கும்போது தீப்பொறி பட்டு குழாயிலிருந்த ரசாயனக் கழிவுகள் தீப்பிடித்ததால் அருகேயிருந்த ரசாயன சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வெடி விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.

வெடி விபத்து குறித்து அறிந்ததும் மாவட்டக் கூடுதல் கண்காணிப்பாளர் சம்பத்குமார், உதகை நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் அனிதா தலைமையில் தொழிற்சாலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் தொழிற்சாலையை ஆய்வு செய்தார்.

9 பேர் உயிரிழப்பு

வெடிமருந்து தொழிற் சாலையில் வெடிமருந்து உற்பத்தி யின்போது பல வெடிவிபத்துகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 93-ம் ஆண்டு ஏற்பட்ட நைட்ரஜன் சிலிண்டர் வெடித்ததில் 5 பேரும், 2010-ம் ஆண்டு ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேரும் உயிரிழந்தனர்.

மருத்துவமனை தரம் கேள்விக்குறி

வெடிமருந்து உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையில் எந்நேரமும் வெடி விபத்து ஏற்படலாம் என்பதால் தொழிற்சாலை வளாகத்திலேயே மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

ஆனால் இந்த மருத்துவ மனையின் தரம் கேள்விக்குறியாக உள்ளது. வெடி விபத்து ஏற்பட்டால் உயர்தர சிகிச்சை அளிக்க மருத்துவமனை எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும். அதற்காக உயிர் காக்கும் கருவிகள் இருக்க வேண்டும்.

ஆனால், திங்கள்கிழமை நடந்த வெடி விபத்தில் காயமுற்ற தொழிலாளர்களுக்கு முதலுதவி மட்டுமே அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக காயமுற்றவர்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் மருத்துவர் ஒப்பந்த முறையிலேயே பணியமர்த்தப்படுகிறார். நிரந்தர மருத்துவர் இல்லாததால் விபத்து ஏற்படும் காலங்களில் செவிலியர்கள்தான் முதலுதவி அளிக்கின்றனர்.

உயிர் காக்க செயல்பட வேண்டிய மருத்துவமனை, சிறு நோய்களுக்கு மருந்த ளிக்கும் மருந்தகமாகவே செயல் படுவதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x