Last Updated : 01 Apr, 2016 10:00 AM

 

Published : 01 Apr 2016 10:00 AM
Last Updated : 01 Apr 2016 10:00 AM

சரத் பவார் கட்சி எம்எல்ஏ ரமேஷ் கதமின் ரூ.120 கோடி சொத்து முடக்கம்

ரூ.300 கோடி ஊழல் வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை



*

மகாராஷ்டிராவில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) எம்எல்ஏ ரமேஷ் கதமுக்கு சொந்தமான ரூ.120 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத் துறை நேற்று முடக்கியது.

சோலாபூர் அருகே உள்ள மஹோல் தொகுதி எம்எல்ஏவான கதம், ஆகஸ்ட் 2012 முதல் டிசம்பர் 2014 வரை அரசுக்கு சொந்தமான லோக் ஷாஹிர் அன்னாபாவ் சாதே டெவலப்மென்ட் கார்ப்பரேஷனின் (ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகம்) தலைவராக இருந்தார். அந்த காலகட்டத்தில் நிதி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, காவல் துறையின் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இதன் அடிப்படையில், கதம் மற்றும் சிலர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இதுகுறித்து அமலாக்கத் துறையின் மும்பை மண்டல அதிகாரி கள் கூறும்போது, “ரமேஷ் கதம், அந்த கார்ப்பரேஷன் அதிகாரிகள் மற்றும் வேறு சிலருடன் சேர்ந்து, தலித் பிரிவினரின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 300 கோடி நிதியை முறைகேடாக பயன்படுத்தி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் கார்ப்பரேஷனை ஏமாற்றியதுடன் இதற்காக போலி ஆவணங்களைப் பயன்படுத்தி உள்ளனர். எனவே கதமுக்கு சொந்தமான ரூ.120 கோடி சொத்துகளை முடக்க உத்தர விடப்பட்டுள்ளது” என்றனர்.

ரமேஷ் கதம், அவரது மனை விக்கு சொந்தமாக மும்பையின் போரிவிலி பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு, அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலம், வங்கியில் உள்ள ரூ.76.67 லட்சம் ரொக்கம் மற்றும் பங்குகளை முடக்க அமலாக்கத் துறை உத்தர விட்டுள்ளது.

டெல்லியில் ரூ.100 கோடி செல வில் புதிதாக மகாராஷ்டிரா சதன் கட்டிடம் கட்டப்பட்டது. இதில் முறை கேடு நடைபெற்றதாக முன்னாள் அமைச்சரும், என்சிபி மூத்த தலை வருமான சகன் புஜ்பால், அவரது மகனும் எம்எல்ஏவுமான பங்கஜ் உள்ளிட்டோர் மீதும் அமலாக்கத் துறை சட்டவிரோத பணப் பரிவர்த் தனை சட்டத்தின் கீழ் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x