ஹரித்துவார் வெறுப்பு பேச்சு வழக்கில் எடுத்த நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஹரித்துவார் வெறுப்பு பேச்சு வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த 'நிலை அறிக்கை'யை ஏப்ரல் 22-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தராகண்ட் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் பகுதியில் கடந்த டிசம்பர் மாதத்தில் தரம் சன்கத் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பேசிய இந்து மதத் தலைவர்கள், 'முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்த வேண்டும்' என்று முஸ்லிம்களை இனப்படுகொலை செய்வதற்கு அழைப்பு விடுப்பது போல வெளிப்படையாக கூறியிருந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல டெல்லியில் மற்றொரு தரம் சன்சத் நிகழ்ச்சியிலும் முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சையான விதத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

ஹரித்துவார் வெறுப்பு பேச்சு குறித்து, பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் மற்றும் பத்திரிகையாளர் குர்பான் அலி ஆகியோர், "சுயாதீனமான, நம்பகமான, பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தரம் சன்சத் வெறுப்பு பேச்சு மனுவுக்கு உத்தராகண்ட் அரசு, மத்திய அரசு, டெல்லி காவல்துறை பதில் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நேற்று மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி வழக்கை நீதிபதி ஏ.எம். கான்வில்கர் மற்றும் நீதிபதி அபய் எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வழக்கு இன்று பட்டியலிடப்பட்டிருந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அப்போது ஞாயிற்றுக்கிழமை இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற இருக்கும் தரம் சன்சத் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று அவர் கோரினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர் மற்றும் அபய் எஸ் ஓகா அடங்கிய அமர்வு, ஹரித்துவார் வெறுப்பு பேச்சு வழக்கின் தற்போதைய நிலை குறித்து நிலை அறிக்கையை வரும் 22-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தராகண்ட் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இமாச்சலப்பிரதேசத்தில் நடைபெற இருக்கும் நடக்கும் சன்சத் நிகழ்ச்சி குறித்து பதில் அளிக்க கோரி இமாச்சலப் பிரதேச மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதேபோல், ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகளை அணுகவும் மனுதாரருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் 4 முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 3 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் உத்தராகண்ட் மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in