Published : 13 Apr 2022 05:52 PM
Last Updated : 13 Apr 2022 05:52 PM

டெல்லி அரசுப் பள்ளிகளில் 5-ல் ஒன்றில் மட்டுமே தலைமையாசிரியர்: ஆய்வறிக்கையில் அதிர்ச்சி

சென்னை: டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் 5-ல் ஒரு பள்ளயில் மட்டுமே தலைமையாசிரியர்கள் உள்ளதாக அதிர்ச்சி அளிக்கும் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றது முதல் சுகாதாரம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். குறிப்பாக, மாநிலம் முழுவதும் மாதிரிப் பள்ளிகளை உருவாக்கியுள்ளார். இதன் காரணமாக அரசுப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் குறைவான தலைமையாசிரியர்கள்தான் பணியில் உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்திய ஆய்வில், 1,027 அரசுப் பள்ளிகளில் 203 பள்ளிகளில் மட்டுமே தலைமையாசிரியர்கள் உள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக டெல்லி தலைமைச் செயலாளருக்கு ஆணையம் சார்பில் எழுதியுள்ள கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆணையத் தலைவர் பிரியங் கானூக்கோ கூறுகையில், "அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகளில் தலைமையாசிரியரின் பங்கு மிக முக்கியமானது. பள்ளி முதல்வர் அல்லது தலைமையாசிரியர் இல்லாதது குழந்தைகளின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள டெல்லி அரசு, டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் நியமிக்க வேண்டியது மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம்தான். எனவே, இது தொடர்பாக அந்த அமைப்பிடம்தான் கேட்க வேண்டும் என்று பதில் அளித்துள்ளது.

நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் டெல்லி பள்ளிகளே மிகவும் சிறப்பான பள்ளிகள், ’டெல்லி மாடல்’ என்று கூறப்பட்டு வந்த நிலையில், அந்தப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லை ஆய்வுத் தகவல் கவனத்தைப் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x