கல்லூரிகளில் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு: யுஜிசி அனுமதி

கல்லூரிகளில் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு: யுஜிசி அனுமதி
Updated on
1 min read

கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்கள் இனி ஒரே நேரத்தில் இரண்டு பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிக்கலாம் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியாகிறது. இந்தத் திட்டம் 2022-2023 கல்வி ஆண்டு முதலே செயல்பாட்டிற்கு வருகிறது.

இதன்படி மாணவர்கள் இரண்டு வெவ்வேறு பாடங்களை நேரடியாக கல்லூரியிலோ அல்லது ஆன்லைனிலோ கற்றுக் கொள்ளலாம். புதிய கல்விக் கொள்கை 2020 அடிப்படையில் இந்த நடைமுறை செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது குறித்து பல்கலை மானியக் குழு தலைவர் ஜகதீஷ் குமார் கூறுகையில், " மாணவர்கள் பன்முகத் திறன்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக, ஒரே நேரத்தில், இரு பட்டப் படிப்புகளை பயில அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால், இப்படிப்புகளை இரு வேறு பல்கலையில் கற்கலாம். அதுபோல ஒரு பட்டப் படிப்பை கல்லுாரியிலும், மற்றொரு பட்டப்படிப்பை ஆன்லைன் வாயிலாகவும் கற்கலாம். இல்லை இரண்டையும் நேரடி வகுப்புகளாகக் கற்பது என்றால் வெவ்வேறு கல்லூரி நேரங்களில் அவற்றில் சேர்ந்து கற்கலாம்" என்று கூறினார்.

யுஜிசி இரு பாடங்களை ஒரே நேரத்தில் பயில மாணவர்களுக்கு அனுமதி அளித்திருந்தாலும் கூட பல்கலைக்கழகங்கள் இதற்கான முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது இளங்கலை, முதுகலைக்கு மட்டுமே பொருந்தும் என்றும் முனைவர் பட்டத்திற்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை மூலம் மாணவர்கள் பல் துறை சார்ந்த அறிவைப் பெறும் வாய்ப்பினைப் பெறுவார்கள் என்று யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கையானது பொறியியல் மாணவர்கள் கலை சார்ந்த பாடங்களையும், கலை பாடம் படிப்போர் அறிவியல் சார்ந்த பாடங்களைப் படிக்கவும் ஊக்குவிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in