Published : 12 Apr 2022 04:43 AM
Last Updated : 12 Apr 2022 04:43 AM

நாட்டை பலவீனப்படுத்தும் வெறுப்பும், வன்முறையும் - காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் வேதனை

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள உணவு விடுதியில் ராமநவமி தினத்தன்று அசைவ உணவு பரிமாறப்பட்டது தொடர்பாக இரு பிரிவு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த அகில இந்திய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். படம்: பிடிஐ

புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் காம்பத் மற்றும் ஹிம்மத் நகரில் ராம நவமி ஊர்வலத்தின் போது வகுப்புவாத மோதல்கள் ஏற்பட்டு, ஒருவர் உயிரிழந்தார். டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் மாணவர்கள் இடையிலான மோதலில் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “வெறுப்பு, வன்முறை, ஒதுக்கிவைத்தல் ஆகியவை நமது அன்புக்குரிய நாட்டை பலவீனப்படுத்துகின்றன. சகோதரத்துவம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றால் ஆன செங்கற்களால் முன்னேற்றத்துக்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது. நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவைப் பாதுகாப்பதற்கு நாம் ஒன்றுபடுவோம்” என்று கூறியுள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் காவேரி விடுதியில் ராம நவமி அன்று அசைவ உணவு பரிமாறுவது தொடர்பாக ஏபிவிபி மற்றும் இடதுசாரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறையில் 6 மாணவர்கள் காயமடைந்தனர்.

வன்முறை தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. அவற்றில் ஒன்றில் மாணவர் ஒருவரின் தலையில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது. ஆனால் அந்த வீடியோக்களின் நம்பகத்தன்மையை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x