Published : 10 Apr 2022 01:11 PM
Last Updated : 10 Apr 2022 01:11 PM

இலவசங்களைக் கொடுப்பது அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவு; அதில் தலையிட முடியாது: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: இலவசங்களை அறிவிப்பதும், கொடுப்பதும் அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவு. அதில் தலையிட முடியாது என இந்தியத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் அஸ்வின் உபாத்யாய என்ற வழக்கறிஞர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அவர், "அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் சாத்தியமற்ற இலவசங்களை அறிவிப்பது லஞ்சம் வழங்குவதற்கு சமம். இது வாக்காளர்களை மறைமுகமாக நிர்பந்திக்கும் செயல். நேர்மையான, நியாயமான தேர்தல் முறைக்கு எதிரானது. அதனால் இதற்குத் தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (ஏப்.10) விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்தியத் தேர்தல் ஆணையமானது, "தேர்தல் வேளையில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கின்றன. அவை நிதி ரீதியாக சாத்தியமா, இல்லை அவற்றால் அந்த மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுமா? என்பதெல்லாம் வாக்காளர்கள் கேட்க வேண்டிய கேள்விகள். ஒரு அரசியல் கட்சி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் எடுக்கும் கொள்கை முடிவுகளில் தேர்தல் ஆணையம் தலையிடமுடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை. அது அதிகாரத்தின் வீச்சை அதிகரிக்கும் முயற்சியாக அமைந்துவிடும். தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே அவர்களை தகுதிநீக்கம் செய்வதும் முடியாது.

இவ்விவகாரத்தில், ஏற்கெனவே எஸ்.சுப்பிரமணியம் பாலாஜி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் தலையிட முடியாது என்று கூறியுள்ளது. இருப்பினும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. அதை எல்லா அரசியல் கட்சிகளுடனும் ஆலோசித்தே வகுத்துள்ளது. தேர்தலில் வாக்களிக்க ஊக்குவிக்க பணமோ, பொருளோ, சலுகைகளோ வாக்காளர்களுக்கு வழங்கக்கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வழக்கைத் தொடர்ந்தவர் கூறுவது போல், தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அறிவிக்கும் கட்சியின் சின்னத்தை முடக்க, அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல. கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேறு மாதிரியான ஊழல்கள் நடந்திருந்தால் மட்டுமே செய்யும்படி அரசியல் சாசனம் அதிகாரம் அளித்துள்ளது. அரசியல் சாசனத்தின்படி, இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை" என்று தெரிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x