Published : 09 Apr 2022 04:44 AM
Last Updated : 09 Apr 2022 04:44 AM

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பில் கண்காணிப்பு குழுவுக்கு முழு அதிகாரம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு | முழு விவரம்

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை.

புதுடெல்லி: தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்வரை முல்லை பெரியாறு அணை கண்காணிப்புக் குழு தொடர்ந்து செயல்படலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அணை பாதுகாப்பு விஷயத்தில் கண்காணிப்புக் குழுவுக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தொடர்பாக கேரளா, தமிழகம் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2005-ம் ஆண்டில் அணை கண்காணிப்பு குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழு ஆய்வு செய்து, அணை பாதுகாப்பாக இருக்கிறது என்பதை உறுதி செய்தது. மேலும், அணை பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த குழுவின் செயல்பாட்டுக்கு கேரள அரசு தடையாக உள்ளது.

இந்தச் சூழலில் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு, நீர் தேக்கி வைக்கும் அளவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இரு மாநிலங்கள் சார்பில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ஏ.எஸ்.ஒகா, சி.டி.ரவிக்குமார் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தமிழக, கேரள அரசுகள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தன. வழக்கு விசாரணையின்போது முல்லை பெரியாறு அணை கண்காணிப்பு குழுவை மாற்ற வேண்டும் என்று கேரள அரசு வலியுறுத்தியது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

இதைத் தொடர்ந்து நீதிபதி கான்வில்கர் அமர்வு நேற்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதில் கூறியிருப்பதாவது:

முல்லை பெரியாறு அணை கண்காணிப்புக் குழுவில் மத்திய நீர் ஆணையத்தை சேர்ந்த பிரதிநிதி மற்றும் தமிழகம், கேரளாவைச் சேர்ந்த தலா ஒரு பிரதிநிதி இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. கண்காணிப்புக் குழுவை மேலும் வலுப்படுத்த தமிழகம், கேரளாவில் இருந்து கூடுதலாக தலா ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும். அடுத்த 2 வாரங்களில் இரு மாநில அரசுகளும் கூடுதல் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும்.

முல்லை பெரியாறு அணையில் பல்வேறு திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதுதொடர்பாக விரிவுபடுத்தப்படும் கண்காணிப்புக் குழுவிடம் தமிழக அரசு முறையிடலாம். தமிழக அரசின் கோரிக்கைகளை குழு ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கண்காணிப்புக் குழுவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும். அப்போதுதான் குழு தனது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும். அணையின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து விவகாரங்கள் குறித்தும் கண்காணிப்புக் குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கும்.

இந்தக் குழுவின் உத்தரவுகளை இரு மாநில தலைமைச் செயலாளர்களும் நிறைவேற்ற வேண்டும். அதற்கு அவர்களே பொறுப்பாளிகள் ஆவர். கண்காணிப்புக் குழுவுக்கு இரு மாநில அரசுகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அணையின் பராமரிப்புப் பணிகளை குறித்த காலத்தில் மேற்கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்புச் சட்டத்துக்கு கடந்த 2021 டிசம்பர் 13-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அணைகளின் பராமரிப்பு, செயல்பாடு தொடர்பான அனைத்து அம்சங்களும் புதிய சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன.

புதிய சட்டத்தின்படி தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் வரை முல்லை பெரியாறு அணை கண்காணிப்புக் குழு தொடர்ந்து செயல்படலாம். வழக்கின் அடுத்த விசாரணைக்கு முன்பாக ஏதாவது அவசர பிரச்சினை எழுந்தால் சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் உரிய முறையில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x