

ஜம்மு காஷ்மீர் மாநில முதல் பெண் முதல்வராக மக்கள் ஜனநாயகக் கட்சித் (பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி நாளை பதவியேற்கிறார். பாஜகவைச் சேர்ந்த டாக்டர் நிர்மல் சிங் மீண்டும் துணை முதல்வராக பொறுப்பேற்கிறார்.
தலைநகர் ஜம்முவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மெகபூபா, நிர்மல் சிங் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்வார்கள் என அங்குள்ள அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
பதவியேற்புக்கு ஒரு நாள் முன்னதாக இன்று ஜம்முவுக்கு வரும் மெகபூபா, தனது கட்சியின் மூத்த தலைவர்கள், துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிர்மல் சிங் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார். அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த துறைகளை ஒதுக்குவது என்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.
காஷ்மீரில் புதிய அரசு பொறுப்பேற்க உள்ள நிலையில், தனது பிடிபி கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்வது குறித்தும் கட்சியினருடன் மெகபூபா ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் எம்.வெங்கய்ய நாயுடு மற்றும் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
ஒமர் அப்துல்லாவுக்கு அழைப்பு
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு மெகபூபா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து ஒமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மெகபூபா என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் விழாவில் கலந்துகொள்வேன்” என பதிவிட்டுள்ளார்.
பாஜக, பிடிபி கூட்டணி அரசு கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி பொறுப்பேற்றது. இதில் பிடிபியின் முப்தி முகமது சையது முதல்வராகவும், பாஜகவின் நிர்மல் சிங் துணை முதல்வராகவும் பதவி வகித்தனர். இந்நிலையில் முப்தி முகமது சையது உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி 7-ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து புதிய அரசு பதவியேற்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் முப்தியின் மகள் மெகபூபா சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இதனால் மீண்டும் பிடிபி, பாஜக கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 26-ம் தேதி மெகபூபா முப்தி, ஆளுநர் என்.என்.வோராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.